

மரம் விழுந்த ஆட்டோ
சென்னை: சென்னை அயனாவரம் அருகே ஆட்டோ மீது பனை மரம் விழுந்து உயிரிழந்த தண்டையார்பேட்டையை சேர்ந்த அப்துல் வாஹித்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழக பாஜக கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை அயனாவரம், மேடவாக்கம் குளக்கரை சாலை - அயனாவரம் சாலை சந்திப்பில் நேற்று ஓடிக் கொண்டிருந்த ஆட்டோவில் ஒரு பனை மரம் விழுந்து தண்டையார்பேட்டையை சேர்ந்த அப்துல் வாஹித் என்ற 38 வயது ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது.
இதை ஒரு விபத்து எனக் கடந்து செல்லாமல், அந்த மரம் விழுந்ததற்கு காரணம் என்ன? அதற்கு யார் பொறுப்பேற்பது என்பதை தெளிவுபடுத்தி அந்த நபர்களுக்கு உரிய தண்டனையை அளிப்பதோடு, அந்த ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
விழுந்த மரமானது சென்னை அயனாவரம் மன நல மருத்துவமனை வளாகத்தின் உள்ளே இருந்தது. மேலும், அந்த வளாகத்தில் இருந்த மரம் சாலை வரை பரவி இருந்தது. கரையானால் அரிக்கப்பட்டு வலுவிழந்த நிலையில், நேற்று அந்த மரம் முறிந்து விழுந்து ஒரு உயிரை பலி வாங்கியுள்ளது.
கரையானால் அரிக்கப்பட்ட மரத்தை அகற்றாமல், அதன் ஆரோக்கியத்தை பேணாமல் அலட்சியமாக இருந்தது அந்த மரத்திற்கு சொந்தமான மருத்துவமனை நிர்வாகத்தின் பெரும் குற்றம். இதற்கு பொறுப்பான அம்மருத்துவமனையின் உரிய அதிகாரி மீது இந்திய தண்டனை குற்றவியல் சட்டம் 304A வின் படி நடவடிக்கை எடுத்து, தண்டனை பெற்றுத் தருவதோடு, இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை அளிக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.
மேலும், சென்னை மாநகராட்சியும் இந்த உயிரிழப்பிற்கு பொறுப்பேற்க வேண்டும். சாலைகள், தெருக்களில், பொது இடங்களில் உள்ள மரங்களின் ஆரோக்கியத்தை / வலுவை மேற்பார்வையிடுவதற்காகவே மாநகராட்சியில் உதவி பொறியாளர்கள் உள்ள நிலையில், இந்த குறிப்பிட்ட மரம் மனநல மருத்துவமனையை தாண்டி சாலையில் பரவியிருந்ததை தொடர்புடைய மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தது பணி அலட்சியமே.
தொடர்புடைய மாநகராட்சி அதிகாரிகள் மீதும் குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு, உரிய தண்டனை பெற்று தருவதோடு ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை அளிப்பதோடு, அவர்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு சென்னை மாநகராட்சியில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசின் தவறுகளால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடை வழங்கும் அரசு, அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் கீழே விழுந்த மரத்தினால் ஏற்பட்ட அப்துல் வாஹிதின் மரணத்தை ஒரு விபத்து என்று அலட்சியப்படுத்தாமல் உடனடியாக உரிய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுபதோடு அந்த நபரின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் ரூபாய் 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதால் மட்டுமே இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது தடுக்க முடியும் என்பதோடு அரசு அதிகாரிகளுக்கு பெரும் பாடமாக அமையும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.