

தமிழக பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா
சென்னை: தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் கடந்த ஜனவரி 9-ம் தேதி நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, சென்னையில் நிருபர்களிடம் நேற்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் 2025-ம் ஆண்டு பொங்கலின்போது திமுக ரூ.1000 வழங்கியது என்ற தவறான தகவலை சொன்னார்.
அந்த அரங்கத்தில் இருந்த தவெக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் ஊடகவியலாளர் கருத்தை எதிர்த்தனர். உடனே அதற்கு அவர் கோபப்பட்டு மேடையிலேயே அவதூறான வார்த்தையை பேசிவிட்டு அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கிறேன் என்று கூறிவிட்டு வெளியே சென்றார். அதன்பின் தனக்கு வேண்டியவர்களை வரவழைத்து நிகழ்ச்சி முடியும் வரை அங்கே காத்திருந்து வெளியே வந்தவுடன் பிரச்சினை செய்யும் முனைப்பில் அவர் இருந்தார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னரே எங்களுக்கு இந்த சம்பவம் தெரிந்தது. வெளியே இருந்தவர்களும் நாங்கள் திமுகவின் படை, அவர்களை பார்த்துக் கொள்கிறோம் என்று கூச்சலிட்டு கொண்டிருந்தனர். உடனே உள்ளே இருந்த திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வனிடம், அவர்களை சமாதானப்படுத்துங்கள் என தொலைக்காட்சி நிர்வாகம் கூறியது. அவர் வெளியே சென்று 15 நிமிடங்கள் அவர்களிடம் பேசிவிட்டு உள்ளே வந்தார். நான் கூறினால் அவர்கள் கேட்கவில்லை, நீங்கள் வேண்டுமானால் பேசிக் கொள்ளுங்கள் என்றார்.
இதையடுத்து அவர்களிடம் பேசுவதற்காக நான் இளைஞரணி சகோதரர்களுடன் சென்றேன். பேச்சு ஆரம்பித்ததும் அவர்கள் பாட்டில் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு எங்களை தாக்குவதற்கு முனைந்தனர். இவை அனைத்தும் அந்த தொலைக்காட்சி வளாக சிசிடிவியில் பதிவாகியுள்ளது. காவல் துறையினர் என்னை பாதுகாப்பாக அருகில் இருந்து கேட்டுக்குள் அடைத்தனர். மேலும், அங்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டு பாஜக இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதன்பின் காவல் துறையினர் பாதிக்கப்பட்ட எங்களிடம் புகார் பெற்றுக் கொள்கிறார்கள். இதில் தவறு இழைத்தது எதிர் தரப்பினர்தான். ஆனால், திடீரென அந்த நிகழ்ச்சிக்கு வராத ஒரு பெண்ணிடம் புகார் மனு வாங்கப்படுகிறது. அதிலுள்ள தகவல்கள் முரணானவை. எங்களை காவல்துறையினர் பத்திரமாக மீட்பது, காப்பாற்ற முடியாதவர்களை திமுகவினர் அடிப்பது அனைத்துமே சிசிடிவி காட்சிகள் ஆதாரத்துடன் உள்ளன. இதன் பின்னணியில் திமுக இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை கொண்டு எதுவும் செய்யலாம் என்று நினைப்பது இந்த ஜனநாயக நாட்டில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
அதேபோல், தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டாலும்கூட திமுக அழுத்தத்தால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நண்பர்களை பாதுகாப்பதற்கான வேலைகளை செய்துவருகிறது. நாங்கள் கொடுத்த புகாரின் மீது எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை எனில் நாங்கள் போராட்டம் நடத்துவோம், நீதிமன்றம் செல்வோம். அருகில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் இருந்து 5 நிமிடத்தில் வரவேண்டிய காவல்துறை ஒரு மணி நேரம் கழித்து வந்தது, திட்டமிட்டு தாமதம் செய்ததா என்ற சந்தேகம் எழுகிறது.
காவல்துறையை அனுப்பவிடாமல் செய்த அரசியல் பின்னணி குறித்த கேள்வியும் எழுகிறது. தற்போது பல்வேறு பிரிவுகளின் கீழ் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் ஒருவரை எந்த தகவலும் இல்லாமல் இரவோடு, இரவாக காவல்துறைர் கைது செய்துள்ளது. ஆளும்கட்சியினர் அதிகாரத்துக்கும், தங்கள் சுயலபாத்துக்கும் காவல்துறையை பயன்படுத்துவது நியாமானதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.