நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.7 முதல் 19 வரை சென்னை புத்தகக் காட்சி!

‘பபாசி 50’ இலட்சினை வெளியிட்டார் பேரவைத் தலைவர்
50-வது ஆண்டு பொன்விழா சென்னை புத்தக கண்காட்சிக்கான இலச்சினையை சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் வெளியிட்டார்.

50-வது ஆண்டு பொன்விழா சென்னை புத்தக கண்காட்சிக்கான இலச்சினையை சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் வெளியிட்டார்.

படம்: எம்.பிரபு.

Updated on: 
2 min read

சென்னை: பபாசி 50-ம் ஆண்டு பொன்விழா சென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் அடுத்த ஆண்டு ஜன.7 முதல் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இலட்சினையை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் வெளியிட்டார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் சென்னை புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 2027-ம் ஆண்டு நடத்தப்பட இருப்பது 50-ம் ஆண்டு பொன்விழா புத்தகக் கண்காட்சி ஆகும். இந்நிலையில், 50-ம் ஆண்டு பொன்விழா புத்தகக் காட்சிக்கான இலட்சினை (லோகா) வெளியீட்டு நிகழ்ச்சி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் இன்று நடந்தது.

இதில் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் கலந்துகொண்டு பொன்விழா ஆண்டு சென்னை புத்தகக் காட்சிக்கான இலட்சினையை வெளியிட்டார். மேலும், சென்னை புத்தகக் காட்சிக்கான புதிய இணையதளத்தையும் (www.chennaibookfair.com) தொடங்கி வைத்து அவர் பேசியது: “பபாசி சென்னை புத்தகக் காட்சி நடத்துவதற்கான மானிய நிதியை முதல்வர் விஜய் ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தி வழங்கியதை வரவேற்கிறேன்.

50-ம் ஆண்டு பொன்விழா புத்தகக் காட்சி அடுத்த ஆண்டு ஜன.7-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. தொலைநோக்குப் பார்வையோடு கடந்த 50 ஆண்டு காலமாக இந்த புத்தகக் காட்சியை நடத்துவது பாராட்டுக்குரியது. இந்த நேரத்தில் பபாசி முன்னாள் தலைவர்களையும் நிர்வாகிகளையும் நினைவுகூர வேண்டியது அவசியம்.

வாசிப்பு பழக்கத்தை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் வாசிப்பு என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தி பரிசு வழங்க வேண்டும் என்று பபாசி அமைப்புக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அதற்கான பரிசுத் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

எனது தொகுதி எம்எல்ஏ அலுவலகம் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ளது. அந்த அலுவலகத்தில் ஒரு நூலகம் அமைக்க விரும்புகிறேன். எம்எல்ஏ-வைப் பார்க்க வரும் பொதுமக்கள், காத்திருக்கும் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க இந்த நூலகம் பயனுள்ளதாக இருக்கும். இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏ-க்களு்ம தங்கள் தொகுதி அலுவலகத்தில் ஒரு நூலகத்தை ஏற்படுத்த வேண்டும்.

வெளியிட முடியாத சூழலில் உள்ள தரமான புத்தகங்களை ஒரு குழு அமைத்து தேர்வு செய்து அதை அரசு சார்பில் வெளியிடலாம். இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்” என்று அவர் பேசினார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் லயோலா மணி பேசும்போது, “பபாசி 50-ம் ஆண்டு பொன்விழா சென்னை புத்தகக் காட்சி தவெக ஆட்சியில் கொண்டாடுவது பெருமை அளிக்கிறது. விஜய் பயிலகம், விஜய் நூலகம் போன்றவற்றை 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியவர்கள் நாங்கள்.

சென்னை புத்தகக் காட்சிக்கு ரூ.1 கோடி மானியம் வேண்டும் என்ற பபாசி கோரிக்கையை முதல்வர் விஜய் உடனே நிறைவேற்றியிருக்கிறார். தமிழ்நாடு பாடநூல் கழகம் 1,300 தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. சட்டப்பேரவை தலைவர் அமைக்கும் தொகுதி அலுவலக நூலகத்துக்கு பாடநூல் கழகம் சார்பில் 1300 புத்தகங்களை வழங்க தயார்” என்றார்.

சென்னை மாவட்ட நூலக அலுவலர் எம்.கவிதா பேசும்போது, “சென்னை புத்தகக் காட்சி, வாசிப்பு பழக்கத்தை மக்களிடையே கொண்டு செல்கிறது” என்று குறிப்பிட்டார். பபாசி முன்னாள் தலைவர்கள் காந்தி கண்ணதாசன், சேது சொக்கலிங்கம், எஸ்.வயிரவன், மீனாட்சி சோமசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக, பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் வரவேற்றார். நிறைவாக செயலாளர் எஸ்.வைரவன் நன்றி கூறினார்.

<div class="paragraphs"><p>50-வது ஆண்டு பொன்விழா சென்னை புத்தக கண்காட்சிக்கான இலச்சினையை சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் வெளியிட்டார்.</p></div>
ஞானேஷ் குமாரை குற்றம்சாட்டப்பட்ட நபராக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in