

சென்னை: நூறு நாள் சாதனையை கடந்து, நூற்றாண்டு போற்றும் சாதனைகளை முதல்வர் விஜய் படைப்பார் என்று சட்டப்பேரவையில் நேற்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 4 நாட்கள் விடுமுறைக்கு பின் துறைகள் தோறும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று தொடங்கியது.
அப்போது, தவெக அரசு 100 நாட்களை நிறைவு செய்திருப்பது தொடர்பாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பேசியதாவது: மதச்சார்பற்ற, சமூகநீதி காக்கும் முதல்வர் விஜய்யின் பொற்கால அரசு பொறுப்பேற்று 100 நாட்களை கம்பீரமாக நிறைவு செய்துள்ளது.
அரசின் இந்த முதல் 100 நாட்கள் என்பது நாட்காட்டியில் கடந்து செல்லும் நாட்கள் அல்ல, தமிழக வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு வரலாற்று மாற்றம். வாக்குறுதி என்பது தேர்தலுக்கான வார்த்தை அல்ல.
அது மக்களுக்கான பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படும் இந்த அரசு, முதல் நாளிலிருந்து மக்களின் நாடித் துடிப்பு அறிந்து, புதிய சிந்தனையுடன் களமிறங்கி முதல் 100 நாட்கள் பல்வேறு துறைகளில் செயல்படுத்திய பணிகள் பாராட்டுக்குரியவை.
ஏழை மக்களின் நலன் காக்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கிலும் பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு படை, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட் வரையிலான இலவச மின்சாரம், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த ரூ.6 ஆயிரம் கோடி பயிர்ககடன் தள்ளுபடி, வீடற்றோருக்கான வெற்றி வீடு திட்டம், அண்ணன் சீர் திட்டம், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, இது மக்களுக்கான அரசு என்பதை முதல்வர் நிரூபித்துள்ளார்.
இந்த குறுகிய காலத்துக்குள் தமிழகத்தின் மக்களாட்சி மாண்பை காக்கும் வகையிலும், தமிழக மக்களின் நீண்டகால கனவை பூர்த்தி செய்யும் வகையிலும் ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான தன்மையை நிர்வாகத்துக்கு வழங்கி வரும் முதல்வரால் விதைக்கப்பட்டிருக்கும் திட்டங்களின் விதைகள், வரும் ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியாகவும், விவசாயிகளின் வளமாகவும், மாணவர்கள் கல்வி வாய்ப்பாகவும் பொதுமக்களின் நல்வாழ்வுக்காக மலரும்.
திரையுலகிலும், மக்கள் மன்றத்திலும் தொட்டதெல்லாம் துலங்கச் செய்த முதல்வர், இன்று 100 நாள் சாதனையை கடந்து, நூற்றாண்டு போற்றும் சாதனைகளை படைக்கப் போகிறார்.
இன்னும் நூற்றாண்டு பேசும் சரித்திரம் படைப்பார் பல சாதனை திட்டங்களை மக்களுக்கு வழங்கி, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுத்து, தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றும் தங்களின் மக்கள் பணி தொய்வின்றி தொடர வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் உரையாற்றினார்.