தவெக எம்எல்ஏ-விடம் குதிரை பேரம் நடத்தியதாக வழக்கு; முன்ஜாமீன் கோரி அசோக்குமார் மனு

காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தவெக எம்எல்ஏ-விடம் குதிரை பேரம் நடத்தியதாக வழக்கு; முன்ஜாமீன் கோரி அசோக்குமார் மனு
Updated on
1 min read

சென்னை: தவெக எம்எல்ஏ-விடம் கோடிக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி குதிரை பேரம் நடத்தியதாகப் பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு முன்ஜாமீன் கோரிய மனுவுக்கு காவல்துறை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவிருப்பதாகவும், அப்போது ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்பட்டால் ரூ.35 கோடி வரை பணம் கொடுப்பதாக தன்னிடம் திமுகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் ஊத்தங்கரை தவெகஎம்எல்ஏ இளையராஜா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபரான திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், திருச்சியைச் சேர்ந்த நரேஷ் உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர்.இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி, செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில் ‘‘சம்பந்தப்பட்ட தவெக எம்எல்ஏ-வை தொடர்பு கொண்டு பேரம் பேசியதா கவோ, மிரட்டியதாகவோ எனக்கு எதிராக எஃப்ஐஆரில் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராகபொய் வழக்கு பதியப்பட்டுள்ளது.

புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் மிக தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் வேண்டுமென்பதால் விசாரணையை திங்களன்று தள்ளிவைக்க வேண்டும்’’ என்றார்.

அசோக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, ‘அதுவரை கைது நடவடிக்கையில் போலீஸார் ஈடுபடக்கூடாது என உத்தரவிட வேண்டும்’’ என்றார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை 6-ம் தேதிக்கு (திங்கள்) தள்ளிவைத்துள்ளார்.

தவெக எம்எல்ஏ-விடம் குதிரை பேரம் நடத்தியதாக வழக்கு; முன்ஜாமீன் கோரி அசோக்குமார் மனு
அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையீட்டை ஏற்க முடியாது: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in