புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு டைட்டானியம் உலோகத்தில் செயற்கை மார்பு எலும்பு

கிண்டி கலைஞர் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு டைட்டானியம் உலோகத்தில் செயற்கை மார்பு எலும்பு
Updated on
1 min read

அரியவகை எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட நபருக்கு டைட்டானியம் உலோகத்தில் தயாரிக்கப்பட்ட செயற்கை மார்பு எலும்பை பொருத்தி கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவமனை இயக்குநர் பார்த்த சாரதி, ஒருங்கிணைப்பு அதிகாரி ரமேஷ் ஆகியோர் கூறியதாவது: சென்னையைச் சேர்ந்த 59 வயதான ராமசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), எலும்புகளில் ஏற்படும் அரிய வகை புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புற்றுநோயின் தீவிரத்தால் மார்பு எலும்பு சிதைவடைந்து, இடது பக்கம் உள்ள 6 விலா எலும்புகள் மற்றும் நெஞ்சுப் பகுதி வரை நோயின் தாக்கம் பரவியிருந்தது பரிசோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து, புற்று நோய் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் சுஜய் சுசிகார் தலை மையில் மருத்துவர்கள் சக்தி உஷாதேவி, அருள், அருண் விக்டர், அரவிந்த், வரகுண பாண்டியன், சதீஷ், அருண் குமார் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் கார்த்திகேயன், அருள், சுப்பிரமணியன், பவித்ரா அடங்கிய மருத்துவக் குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

இதில், பாதிக்கப்பட்ட மார்பு எலும்பு. விலா எலும்புகள், அதைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்கள் அகற்றப்பட்டன. இதனால், அப்பகுதியில் 15 × 10 செ.மீ. அளவுக்கு வெற்றிடம் உருவானது. இதையடுத்து, அவரது உடல் அமைப்புக்கு ஏற்ப, 3 டி தொழில் நுட்பம் மூலமாக டைட்டானியம் உலோகத்தில் பிரத்யேகமாக மார்பு எலும்பு வடிவமைக்கப்பட்டு, பொருத்தப்பட்டது. உடலின் மற்ற பகுதியில் இருந்து திசுக்கள் எடுக்கப்பட்டு மார்பில் வைக்கப்பட்டன. சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமுடன் உள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக கிண்டி மருத்துவமனையில் தற்போது இந்த அரிய, சிக்கலான உயர்தர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் இதை மேற்கொள்ள ரூ.12 லட்சம் வரை செலவாகும். ஆனால், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு டைட்டானியம் உலோகத்தில் செயற்கை மார்பு எலும்பு
சென்னை: போலீஸ் உடையில் வந்து பழக்கடை ஊழியரிடம் ரூ.14 லட்சம் பறிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in