அஜித்குமார் காவல் மரண வழக்கில் டிஎஸ்பி சண்முகசுந்தரத்துக்கு எதிராக பிடிவாரன்ட்

கைது செய்து ஆஜர்படுத்த சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு
அஜித்குமார் காவல் மரண வழக்கில் டிஎஸ்பி சண்முகசுந்தரத்துக்கு எதிராக பிடிவாரன்ட்
Updated on
1 min read

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத டிஎஸ்பி சண்முகசுந்தரத்துக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்துள்ள நீதிமன்றம், அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தார். இது தொடர்பாக தனிப்படைக் காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ராமச்சந்திரன் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் காவல் மரணம் நிகழ்ந்தபோது, மானாமதுரை டிஎஸ்பியாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகியோர் எதிரிகளாக சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கில் சண்முகசுந்தரம் முன்ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு இருமுறை தள்ளுபடியானது. தனிப்படைக் காவலர்கள் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரிக்கவும், வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கூடுதல் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்ட சண்முகசுந்தரம் உட்பட 4 பேரும் நேரில் ஆஜராகுமாறு, மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அசன் அலி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஎஸ்பி சண்முகசுந்தரம் தவிர்த்து, காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகியோர் ஆஜராகினர்.

டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமறைவாக இருப்பதாக நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிபதி, அவரைக் கைது செய்து நாளை (டிச.26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிபிஐக்கு உத்தரவிட்டார். மேலும், ரமேஷ்குமார், சிவக்குமார், இளையராஜா ஆகியோர் நாளை ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அஜித்குமார் காவல் மரண வழக்கில் டிஎஸ்பி சண்முகசுந்தரத்துக்கு எதிராக பிடிவாரன்ட்
மக்களின் தோழர் நல்லகண்ணு: மகத்தான அரசியல் பயணம் - ஒரு பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in