

கும்பகோணம்: தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி மீது அர்ஜுன் சம்பத் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கும்பகோணம் மடத்து தெருவில் இந்து மக்கள் கட்சி சார்பில் ‘எல் நினோ’ பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம், “தமிழகத்தை அச்சுறுத்தி வரும் எல் நினோ பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய் கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கோயில் விழாக்களில் அவர் வெளிப்படையாக பங்கேற்பதில் சிறப்பு கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது. தமிழகத்தில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்க வேண்டும்.
அதேபோல், ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு முன்னின்று நடத்தி வருகறது. விழாவுக்கான பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவது முன்னுதாரணமாக உள்ளது. தமிழக அரசும் இதுபோன்று நடைமுறைப் படுத்தினால் முழு ஒத்துழைப்பு வழங்குவோம். எனவே, ஆந்திராவைப் போல தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது காவல்துறையினரின் சம்பளத்தை ரூ.25 ஆயிரம் வரை உயர்த்தித் தருவதாகவும், காவல்துறையை மேம்படுத்துவதாகவும் முதல்வர் வாக்குறுதி அளித்திருந்ததார். நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அந்த அறிவிப்புகள் வெளியாகும் என காவல்துறையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இதுவரை அது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகாதது வருத்தமளிக்கிறது. காவல் துறையினரின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
விரைவில் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலகம் அவசியம். ஆனால் தலைமைச் செயலகத்தை திருச்சிக்கு கொண்டு வர வேண்டும். எம்ஜிஆர் காலத்தில் தலைநகரையே திருச்சிக்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் அனைத்து முக்கிய நிர்வாக அமைப்புகளும் இருப்பதால், நகரம் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் தமிழகத்தின் சீரான வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
மதுரையில் சென்னை உயர் நீதிமன்ற கிளை செயல்படுவது போன்று, தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் தலைமைச் செயலகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்களை அமைத்தால் நிர்வாக ரீதியாக சிறப்பாக இருக்கும்.
‘மதச்சார்பற்ற’ என்று சொல்லும் போதே தொப்பியோடு நிற்கிறார் அந்தக் கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தை கட்சியினரும், வைகோவும் இன்னுமே ‘மதச்சார்பற்றவர்கள்’.
ஏற்கெனவே விஜயகாந்த் தலைமையில் மக்கள் நல கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த மக்கள் நல கூட்டணி எந்த வகையில் வாக்குக்களைப் பிரிப்பதற்கும் இவர்களுடைய மறைமுக செயல் திட்டங்களை அரங்கேற்றிக் கொள்வதற்கும் பயன்பட்டதோ அதேபோன்று இந்த மதச்சார்பற்ற, சமூக நீதிக் கூட்டணி என பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் உண்மையான மதச்சார்பற்றவர்கள் யாரும் கிடையாது. அதில் மத வெறியர்கள், மத வெறியர்களை ஆதரிப்பவர்களாக சேர்ந்துள்ளனர். தமிழக முதல்வர் விஜய்யும், தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்தவர்களும் அவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். அவர்கள் கேப்டன் விஜயகாந்த் அனுபவத்தை படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தினுடைய சட்டம் - ஒழுங்கு என்பது பாராட்டத்தக்கதாக இல்லை. திராவிட மாடல் ஆட்சியில் எப்படி இருந்ததோ அப்படித்தான் இருக்கிறது. தமிழக முதல்வர் விஜய், இது சம்பந்தமாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதில் தவெக உள்பட எந்தக் கட்சி நிர்வாகியாக இருந்தாலும், குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கு மிக முக்கியமான காரணம் கஞ்சா, சாராய போதை தான்.
தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கும் சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்கும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தினுடைய சட்டம் ஒழுங்கை நல்ல விதமாக பராமரிக்க வேண்டும். தமிழக முதல்வர் விஜய் பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகி உள்ளதால், இந்த விஷயத்திலே அவர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மகாமகம் விழாவுக்கு இன்னும் 2 ஆண்டுகளை உள்ள நிலையில் அதற்கான பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்” என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
முன்னதாக, கோபூஜை, அஸ்வ பூஜை நடைபெற்றது. இதே போல் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி முருகன் வடிவத்தில் உள்ள விநாயகர் சிலைக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். இதில் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி, பாஜக மாவட்ட முன்னாள் தலைவர் சதீஷ்குமார், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.