

திருவாரூர்: திராவிட மாடல் 2.0 ஆட்சியாகவே தவெகவின் ஆட்சி உள்ளது என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற 15 நாட்களில் 40-க்கும் மேற்பட்ட படுகொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
திமுக ஆட்சியில் என்னவெல்லாம் நடந்ததோ, அவை தவெக ஆட்சியிலும் தொடர்கின்றன. பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவதை நிறுத்த முடியவில்லை. போதைப் பொருளை ஒழிக்க முடியவில்லை.
தமிழகத்தில் நிகழும் குற்றங்கள் அனைத்துக்கும் போதை ஆசாமிகள்தான் காரணமாக உள்ளனர். மதுக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதால் எந்தப் பலனும் இல்லை. அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும்.
முதல்வர் விஜய் இன்னொரு மு.க.ஸ்டாலினாக மாறிவிடக்கூடாது. திராவிட மாடல் 2.0 ஆட்சியாகதான் தவெகவினுடைய ஆட்சி உள்ளது. இந்த நிலைமை தொடரக்கூடாது.
தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தவுடன் மின்தடை ஏற்பட்டதைப்போல, தவெக ஆட்சி வந்த உடனும் மின்தடை ஏற்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதை கட்டுக்குள் கொண்டுவர பிரதமர் முயற்சித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.