மதுரை: திருப்பரங்குன்றம் தீபத் தூண் சிக்கந்தர் தர்காவுக்கு சொந்தமானது என்று வக்பு வாரிய வழக்கறிஞர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வாதாடினார். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, அறநிலையத் துறை, கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம் உட்பட 20 மேல்முறையீட்டு மனுக்களும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிராக 6 மேல்முறையீடு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று நடைபெற்றது. வக்பு வாரிய வழக்கறிஞர் முபின் வாதிடும்போது, “மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்றும் பழக்கம் இருந்ததில்லை. நெல்லித்தோப்பு மற்றும் அது சார்ந்த பாதைகள், அவ்விடத்துக்குச் செல்லும் படிக்கட்டுகள் தர்கா நிலங்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் துறையிடம் தனி நீதிபதி கருத்து கேட்கவில்லை” என்றார். இதையடுத்து நீதிபதிகள், தர்காவுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் தரப்பு வழக்கறிஞர் விகாஸ்சிங் வாதிடும்போது, “தனி நீதிபதி தீர்ப்பால் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
1862, 1960-ம் ஆண்டுகளில் பிரச்சினை எழுந்தபோது, தீபம் ஏற்ற அனுமதி கொடுக்கவில்லை. தர்கா அருகில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று புதிதாக உத்தரவிட்டு, அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடுவது ஏற்புடையதல்ல. தர்காவுக்குச் சொந்தமான பாதை வழியாக சென்றுதான் தீபம் ஏற்ற முடியும். இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.
தனி நீதிபதிக்கு மதம் சார்ந்த விவகாரங்களில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை. அவரது உத்தரவால் பொது அமைதி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
தனி நீதிபதி, தான் எடுத்துக்கொண்ட சத்தியப் பிரமாணத்துக்கு எதிராக செயல்பட்டுள்ளார். அவருக்கு வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புள்ளது” என்றார். இதற்கு மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் வழக்கறிஞர்கள் வாதிடும்போது, “தனி நீதிபதி ஆய்வு செய்த பின்னரே, தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார். தர்காவில் இருந்து 15 மீட்டருக்கு அப்பால்தான் தூண் உள்ளது” என்றார். அப்போது நீதிபதிகள், “தூண் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள்.
மலை உச்சிக்குச் செல்ல எத்தனை பாதைகள் உள்ளன. அவற்றில் பயன்பாட்டில் உள்ளவை எத்தனை, அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், அது சர்வே தூண் என்றும், சமணர் கால கல் தூண் என்றும் கூறப்படுகிறது.
அரசு, அறநிலையத் துறை, தர்கா, காவல் துறையின் ஆட்சேபங்களை தனி நீதிபதி கருத்தில் கொண்டாரா, 1994 தீர்ப்பில் மலை உச்சியில் உள்ள தூண் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதா, மாற்று இடத்தைப் பரிசீலிக்கத்தானே கூறப்பட்டுள்ளது, பிறகு தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என கோர முடியுமா” என்று கேள்வி எழுப்பினர்.
மனுதாரர்கள் தரப்பில், “தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற வேண்டியது காவல் துறையின் கடமை. வழக்கை விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும்” என்று கூறப்பட்டது. இதையடுத்து, விசாரணையை டிச. 17-ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தலைமைச் செயலர், ஏடிஜிபிக்கு விலக்கு அளிக்க மறுப்பு: திருப்பரங்குன்றம் தீப வழக்கு உத்தரவை நிறைவேற்றாததால் மதுரை ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, விசாரணையை டிச. 17-க்கு (இன்று) தள்ளி வைத்த தனி நீதிபதி, தாமாக முன்வந்து மத்திய உள்துறைச் செயலரை எதிர் மனுதாரராகச் சேர்த்தும், தமிழக தலைமைச் செயலர், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகவும் உத்தரவிட்டார்.
இதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயர் நீதிமன்ற அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, தலைமைச் செயலர், ஏடிஜிபி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார். அதற்கு நீதிபதிகள், “தற்போதைய சூழலில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (இன்று) தொடரும்" என்று உத்தரவிட்டனர்.