“அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா?” - வானதி சீனிவாசன் காட்டம்

வானதி சீனிவாசன் | கோப்புப்படம்
வானதி சீனிவாசன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: ‘முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படும் வேளையில், குறைந்தபட்சம் வாகன ஏற்பாடு கூட செய்யத் தவறியது முறையற்ற செயல். அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமாகப் போய்விட்டதா?’ என பாஜக மூத்த தலைவர் வானதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கள்ளக்குறிச்சி அருகே முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை ஆபத்தான முறையில் ஏதோ சரக்குகளை ஏற்றிச் செல்வது போல் மினி லாரியில் ஏற்றி அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் செய்தி கடும் கண்டனத்துக்குரியது.

கடந்த சில நாட்களாகவே அதிக எண்ணிக்கையிலான விபத்து குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ள நிலையில் போக்குவரத்து விதிகளை மீறியும், மாணவர்களின் நலனின் மீதும் எந்த அக்கறையும் இன்றியும், ஆசிரியர்கள் துணையின்றி அழைத்துச் சென்றது அதிர்ச்சி அளிக்கிறது.

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படும் வேளையில், குறைந்தபட்சம் வாகன ஏற்பாடு கூட முறையாக செய்யத் தவறியது முறையற்ற செயல். அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமாகப் போய்விட்டதா?

மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தைத் தூண்டும் முயற்சியின் பலனையே இத்தகைய சம்பவங்கள் சிதைப்பது கவலை அளிக்கும் செயலாகும். மாணவர்களை பாதுகாப்பாக வேன் அல்லது மினிபஸ் போன்ற வாகனத்தில் அழைத்துச் செல்லாமல் இதுபோன்று சரக்கு வாகனத்தில் பயணம் செய்ய அனுமதி கொடுத்தது யார்?

சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றக் கூடாது என்ற அடிப்படைச் சட்டம் கூட அறிந்திருக்கவில்லையா?

இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பயணியர் வாகனங்களில் பாதுகாப்பாக மாணவர்களை அழைத்துச் செல்ல உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறையை வலியுறுத்துகிறேன்.

மேலும் மாணவர்களை சரக்கு வாகனத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்தவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன் | கோப்புப்படம்
காவிரியில் கர்நாடகா நீர் திறப்பதை முதல்வர் விஜய் உறுதி செய்ய தமிழக பாஜக வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in