

இந்திய வாக்காளர் சங்கம், சென்னை மாநகராட்சி சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான்-2026 நேப்பியர் பாலம் அருகே நேற்று நடைபெற்றது. இதை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி,100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறுவது குறித்த விழிப்புணர்வு மாரத்தானை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டப்பேரவைத் பொதுத்தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகுதிகளிலும் நேர்மையான மற்றும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு மற்றும் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள், அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் தேர்தல் குறித்த விளம்பரங்கள், விநாடி-வினா, பேருந்துகளின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திரையரங்குகள், வானொலி மற்றும் சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வுப் பாடல்கள் உள்ளிட்ட பல்வகை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி மற்றும் இந்திய வாக்காளர் சங்கம் இணைந்து, நேர்மையான மற்றும் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சென்னை நேப்பியர் பாலம் அருகில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கலந்துகொண்டு மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் ஓட்டம் நேப்பியர் பாலத்தில் தொடங்கி காமராஜர் சாலை வழியாக விவேகானந்தர் இல்லம் வரை சென்று மீண்டும் நேப்பியர் பாலம் வந்தடைந்தது.
மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம்,பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அர்ச்சனா பட்நாயக் பேசும்போது, ``அனைவரும் இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும். வாக்காளர்கள் எளிதில் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன'' என்றார்.
வாக்குச்சாவடியில் வசதிகள்
மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் பேசும்போது, ``வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, நிழற்பந்தல் வசதிகள் உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன'' என்றார்.
இவ்விழாவில், இணை தலைமைத் தேர்தல் அதிகாரி ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி கட்டா ரவி தேஜா, இந்திய வாக்காளர் சங்க நிறுவனத் தலைவர் இளந்திருமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.