துணைவேந்தர்கள் நியமனம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைத்த வேண்டுகோள்

துணைவேந்தர்கள் நியமனம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைத்த வேண்டுகோள்
Updated on
1 min read

சென்னை: ‘காலியாக உள்ள 15 துணைவேந்தர் பதவிகளை நிரப்ப தேடுதல் குழுவின் பரிந்துரைப் பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்து நியமிக்க அனுமதிக்க வேண்டும்’ என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே மீண்டும் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும்வரை எந்தவொரு நியமனங்களும் மேற்கொள்ளப்படாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்திருந்தது.

இந்நிலையில், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞரான வெங்கடாஜலபதி என்பவர் தொடர்ந்த வழக்கும், துணைவேந்தர் பதவிகளை நிரப்ப ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர் அதிகார குழுவை நியமிக்கக் கோரி, செங்கல்பட்டைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தொடர்ந்த வழக்கும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், “தமிழகத்தில் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் தற்போது 15 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாததால் கல்வி தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்க முடியவில்லை. நிதி ஒதுக்கீடு இல்லாமல் பல்கலைக்கழக பணிகளும் ஸ்தம்பித்துள்ளன” என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்துள்ள உத்தரவாதம் காரணமாக துணைவேந்தர்களை நியமிக்க முடியவில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில் தேடுதல் குழுவின் பரிந்துரைப்பட்டியலில் உள்ள 3 பேரில் ஒருவரைத் தேர்வு செய்து நியமிக்க அனுமதிக்க வேண்டும்.

ஏனெனில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு ரத்து செய்யப்பட்டு வி்ட்டதால் அந்த சட்டம் இன்னும் அமலில் உள்ளதாகவே கருத வேண்டும். அதன்படி செயல்பட தமிழக அரசை அனுமதித்தால் மகிழ்ச்சியே” என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்குகளில் விரைவில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும், எனக் கூறி விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

துணைவேந்தர்கள் நியமனம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைத்த வேண்டுகோள்
‘விவசாயிகளும் மாணவர்களும் மோடி அரசை நெருக்குவார்கள்’ - ராகேஷ் திகாயத் சந்திப்புக்குப் பின் சிஜேபி நம்பிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in