

சென்னை: ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் பிரகாஷின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புடைய தன்னுடைய சொத்துகளை விற்ற வீரமணி, தான் கைது செய்யப்படமால் இருப்பதற்கு பல கோடி ரூபாய் தொகையை சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து புகாரை முடிக்க முயன்றதாக குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
இதையடுத்து, சொத்துகளை விற்றது மற்றும் அதற்கு உதவியதாகவும் பெரும் தொகை பெற்றதாகவும் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் மீது காவல் துறை குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராக பிரகாஷுக்கு காவல்து றை சம்மன் அனுப்பியபோது அவர் வெளிநாட்டில் இருப்பது தெரியவந்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பிரகாஷ்க்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பின்னர், தமக்கு எதிரான குற்றச்சாட்டில் தான் கைது செய்ய வாய்ப்பு உள்ளதால், வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என பிரகாஷ், சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி எஸ்.பத்மா முன் விசாரணை வந்தது.
அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அபுடுக்குமார் ராஜரத்தினம், “காவல் துறை கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள். மனுதராருக்கு எதிரான எந்தப் புகாரும் இல்லை. முகந்திரம் இல்லாத புகார் விசாரணைக்கு முறையாக ஒத்துழைப்பு அளித்தார். எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டார்.
காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனிதா, “விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. தற்போது முன்ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை பாதிக்கும். இந்த வழக்கில் பல கோடி பணம் கை மாறியுள்ளது. எனவே, அது குறித்து விசாரணை செய்ய வேண்டும்” என வாதிட்டார். இதனையடுத்து முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இன்று தீர்ப்பளித்த நீதிபதி எஸ்.பத்மா, ‘விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. மேலும் பெரும் தொகை பணம் கைமாறி உள்ளது. இது குறித்து காவல் துறை விசாரணை நடத்த வேண்டும்.
தற்போதைய நிலையில் முன்ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கும் என்ற காவல் துறை தரப்பு வாதங்களை ஏற்று முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது’ என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.