

லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்திய கோவை வடக்கு டாஸ்மாக் மேலாளர் அலுவலகம்.
படம்: ஜெ.மனோகரன்
கோவை: கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாக அலுவலகங்கள், மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகள் என 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று (ஜூலை 29) சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்கள், டாஸ்மாக் நிர்வாக அலுவலகங்கள், மதுபான உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் இன்று (ஜூலை 29) காலை லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர். அதன்படி, கோவையிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனை நடத்தப்பட்டது.
கோவை பீளமேடு காந்திமாநகர் சாலையில் கோவை வடக்கு டாஸ்மாக் மேலாளர் அலுவலகம், பொள்ளாச்சியில் உள்ள கோவை தெற்கு டாஸ்மாக் மேலாளர் அலுவலகம், துடியலூரை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மதுபான தயாரிப்பு தொழிற்சாலை, இந்த மதுபான நிறுவனத்துக்கு சொந்தமாக திருச்சி சாலை ராமநாதபுரம் பகுதியில் உள்ள அலுவலகம், ரத்தினபுரியில் உள்ள தனியார் மதுபான தயாரிப்பு தொழிற்சாலை, நவக்கரை பகுதியில் உள்ள தனியார் மதுபான தயாரிப்பு தொழிற்சாலை ஆகிய 6 இடங்களில் இந்த சோதனைகள் இன்று நடத்தப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் எஸ்.பி. ராஜேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து மேற்கண்ட இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சோதனையில், மதுபான தயாரிப்புகள், விற்பனைகள், இருப்புகள் ஆகியவற்றின் கணக்குகள் முறையாக உள்ளனவா?, நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதா? என்பன உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, அங்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி அதுதொடர்பாக அங்கிருந்தவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். இந்த சோதனையின் முடிவில் பறிமுதல் விவரங்கள் தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.