“ஊழல் பெருச்சாளிகள்... தமிழக பாஜகவை மோடி, அமித் ஷா தூய்மைப்படுத்த வேண்டும்” - ஏ.என்.எஸ்.பிரசாத்

“ஊழல் பெருச்சாளிகள்... தமிழக பாஜகவை மோடி, அமித் ஷா தூய்மைப்படுத்த வேண்டும்” - ஏ.என்.எஸ்.பிரசாத்
Updated on
4 min read

சென்னை: ‘தமிழக பாஜகவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியத் தலைவர் நிதின் நபின் தூய்மைப்படுத்த வேண்டும். தமிழக பாஜகவின் மோசமான தோல்விக்கு தார்மிக பொறுப்பேற்று நயினார் நாகேந்திரன் பதவி விலக வேண்டும்’ என தமிழக பாஜக மாநில முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய், திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என்று சொல்லி இருந்தேன். அப்போது, தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து என்னை விடுவித்தார்கள்.

கட்சியின் நலன் கருதி தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை மிக பிரம்மாண்டமாக முடிவு செய்யும் வண்ணம், திமுக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வீழ்த்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நான் கூறிய கருத்துக்கு எந்தவித விளக்கமும் கேட்காமல் என் மீது அன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.

என் மீது எந்த தவறும் இல்லை என தமிழக பாஜக தலைமை நன்கு உணர்ந்த உடன், நான் எந்த கடிதமும் கொடுக்காமல், திடீரென்று பத்து நாட்களுக்குள், நான் மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்ததாக என்னை அவமானப்படுத்தும் விதத்தில், மீண்டும் செய்தி தொடர்பாளராக என்னை தொடர மாநில தலைமையில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தற்பொழுது நடிகர் விஜய் ஆட்சி அமைய அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நான் கூறிய அறிக்கை கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக இருப்பதாக கூறப்பட்டதன் அடிப்படையில், கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் என்னை நீக்கி இன்று மதியம் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தமிழக முதல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக மக்கள் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை அளித்ததை அனைத்து கட்சிகளும் வரவேற்க வேண்டும். அனைத்து தலைவர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நேர்மறை அரசியலை எனது தனிப்பட்ட கருத்தாக குறிப்பிட்டு இருந்தேன்.

இதுகுறித்து பிரதமர் மோடியிடமும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும், தேசியத் தலைவர் நிதின் நபீன் ஆகியோரிடமும் வலியுறுத்துவேன் என்று கூறியிருந்தேன்.

நடிகர் விஜய் அரசமைப்பதை பாஜக தடுக்கிறது என்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும் என்பதை நன்கு உணர்ந்து, தொலைநோக்கு சிந்தனையுடன் அதை முறியடிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் பாஜகவிற்கும், பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் அறிக்கை அளித்திருந்தேன்.

எனது அறிக்கையை முழுவதுமாக படித்தால் பாஜகவின் பெருமையை, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு இந்த தேர்தலில் ஆற்றிய பங்களிப்பை தெளிவாக குறிப்பிட்டு இருந்தேன்.

அதேசமயம் தமிழக மக்கள், எதிர்கால தமிழகத்தின் மாற்றத்திற்கான தலைவராக நடிகர் விஜய்யை முதல்வராக வேண்டி வாக்களித்துள்ளார்கள். நடிகர் விஜய் பெற்ற வெற்றிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி மிக முக்கியமான காரணமாக, அடித்தளமாக இருந்துள்ளது என்கிற உண்மையை மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் ஆதரவு பெற்ற நடிகர் விஜய் ஆட்சி அமைக்க அனைத்து கட்சிகளும் தமிழகத்தில் ஆதரவளிக்க வேண்டும் என்று அரசியல் நாகரிகத்தோடு, தமிழகத்தில் சுயநல குதிரை பேர அரசியல் நடக்கக் கூடாது என்கிற எனது தமிழக அரசியல் நலம் சார்ந்த நியாயமான கருத்தை, தமிழ் குடிமகனாக மிக எதார்த்தமாக தெரிவித்திருந்தேன். இதில் எந்த தவறும் இல்லை.

ஆனால், 28 ஆண்டுகள் தமிழக பாஜக கட்சியின் தொண்டராக, தொகுதி, மாவட்ட, மாநில நிர்வாகியாக அனைத்து படிநிலைகளிலும் முழுமையாக அர்ப்பணிப்புடன் பணி செய்து வந்த என்னிடம், எந்தவித விளக்கமும் கேட்காமல், திடீரென்று இன்று அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உள்நோக்கத்துடன் என்னை நீக்கியது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

மேலும் கடந்த முறை மாநில செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து ஏ.என்.எஸ் பிரசாத் விடுவிக்கப்படுகிறார் என்று மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்தார். இன்று என்னை நீக்கும் பொழுது கட்சியின் கட்டுப்பாட்டிற்கு தொடர்ந்து களங்கம் விளைவிப்பதாக, அவதூறு செய்து காயப்படுத்தி பொறுப்பில் இருந்து வெளியேற்றுவது கண்ணீரை வரவழைக்கிறது.

தமிழக பாஜக தலைமை எடுக்கும் முடிவை நான் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் அதேசமயம் தேசிய தலைமை என்னை அகில இந்திய செய்தி தொடர்பாளராக அறிவிக்கக்கூடிய சூழ்நிலையில், வேண்டுமென்றே என்னை திட்டமிட்டு அவதூறு செய்து என்னை, என் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தின் அடிப்படையில் என்னை பொறுப்பில் இருந்து நீக்கி இருப்பது நியாயமற்றது.

தமிழக பாஜகவின் சில மூத்த தலைவர்கள், வேண்டுமென்று எனக்கு அங்கீகாரம் கொடுக்காமல், என்னை தொடர்ந்து அவமானப்படுத்தி துரோகங்கள் செய்தாலும், சோதனைகள் வந்தாலும்

அனைத்தையும் தாங்கிக் கொண்டு பாஜகவின் கொள்கைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் கட்டுப்பட்டு, பாரத பிரதமர் மோடியின் தொண்டனாக தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்கு நான் சிறப்பாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்.

என்னை தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளராக முழு சுதந்திரம் அளித்து செயல்பட வைத்த தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும், தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம், தமிழக பாஜகவின் மோசமான தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதவி விலக வேண்டும்.

அதேபோல் ஒவ்வொரு முறையும் தொகுதிகளை மாற்றி, தமிழக பாஜக கட்சியினரை ஏமாற்றி, தொடர்ந்து கட்சியினரை அனைத்து நிலைகளிலும் அவமானப்படுத்தி கேவலப்படுத்தி, நேர்மையின்றி, ஒழுக்கமற்ற முறையில் செயல்படும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தன்னுடைய தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று, பிரதமர் மோடிக்கு களங்கம் ஏற்படுத்தாமல் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

கட்சிக்காக அர்ப்பணிப்புடன் முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் உயிரைப் பணயம் வைத்து, திமுகவை எதிர்த்து தேர்தல் கமிஷன் எஸ்சி எஸ்டி கமிஷன் மனித உரிமை கமிஷன் மாநில மகளிர் கமிஷன் என்ன பல்வேறு மத்திய அரசு துறைகளில் ஏராளமான புகார்கள் அளித்தேன். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு போட்டேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்னுடைய சொந்த பணம் 20 லட்சம் ரூபாய் செலவு செய்து கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக பத்தாயிரம் வாக்குகளுக்கு மேல் குறைவாக பெற்றிடும் வகையில் பல அச்சுறுத்தல்களுக்கு இடையில், உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தான சூழ்நிலையில் துணிந்து தேர்தல் வேலை பார்த்தேன்.

எத்தனையோ வகையில் கட்சிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தும் என்னை எந்தவித விளக்கமும் கேட்காமல் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே என் பதவியை பறிக்கும் எண்ணத்துடன் திட்டமிட்டு நீக்கியது குறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியத் தலைவர் நிதின் நபின் அவர்களிடம் விரைவில் நேரில் சந்தித்து தெரிவிப்பேன்.

மேலும் தமிழக பாஜகவில் நடைபெற்ற அனைத்து சீர்கேடுகளையும் ஆதாரங்களுடன் அளித்து, தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு என் பங்களிப்பை துணிந்து இனி உறுதியாக அளிப்பேன். இனி தமிழக பாஜகவும் தமிழக பாஜக தொண்டர்களும் எந்தவித பாதிப்புக்கும் ஆளாகாதவாறு தொண்டனாக எனது பங்களிப்பை அளிப்பேன்.

மேலும் தமிழக பாஜகவின் சுயநல அரசியல் தலைவர்கள் தேர்தலின் போது கட்சி பணத்தை கொள்ளை அடித்தது குறித்தும், நிர்வாகிகளை வேட்பாளராக அறிவிக்க பணம் பெற்றது குறித்தும், தேர்தலுக்கு வேட்பாளர்கள் தங்கள் பூத்துகளுக்கு செலவிட கொடுக்கப்பட்ட பணத்தை இடையில் சூறையாடியது குறித்தும் முழுமையாக விசாரணை செய்ய வேண்டும் என்று தேசிய தலைமையிடம் வலியுறுத்துவேன்.

மேலும், எந்தவித கட்சிப் பணியும் செய்யாமல், கட்சித் தொண்டர்களுக்கு பதவி வாங்கித் தருகிறேன் என்று பணம் பறித்து, குடித்து, ஓட்டலில் ஓசி சோறு சாப்பிட்டு பல்வேறு கட்சியினரோடு வியாபார ஒப்பந்தங்களை போட்டு ,அரசியல் வியாபாரம் செய்து, தமிழக பாஜக கட்சியின் நிர்வாக சீர்கேட்டுக்கு காரணமாக இருந்த மாநில நிர்வாகிகள், மற்றும் பிரதமரின் நிகழ்ச்சிகள், மற்றும் முக்கிய பாஜக நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் கட்சி நிதியை முறைகேடாக செலவு செய்ததாக கூறி பணம் பெற்ற நிர்வாகிகள் குறித்தும் முழுமையாக விசாரணை நடைபெற வேண்டும் என்றும் தேசிய தலைமையை வலியுறுத்துவேன்.

தமிழக பாஜகவை முழுமையாக சீர்படுத்தும் விதத்தில், தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை மீண்டும் தமிழக பாஜக தலைவராக நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.

தமிழகத்தில் உள்ள பாஜகவின் இளம் தலைவர்களை அடையாளம் கண்டு தமிழக பாஜகவில் ஊழல் பெருச்சாளிகளை அகற்றி புது ரத்தம் ரத்தம் பாய்ச்சக் கூடிய வகையில்

பிரதமர் மோடியின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தொலைநோக்கு சிந்தனைகளை லட்சியங்களை, மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் கடைகோடி தொண்டனுக்கும் கொண்டு போய் சேர்க்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்க முயற்சிப்பேன். தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் தமிழக மக்கள் விரும்பும் மாற்றத்திற்கான ஆட்சி அமைய வேண்டும் என தொண்டர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்பொழுது யார் தமிழகத்தில் ஆட்சி அமைத்தாலும், வருகின்ற 2030 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் தமிழக பாஜக தலைமையிலான வெற்றி கூட்டணி பிரதமர் மோடியின் வெற்றிக்கு மிகச் சிறப்பான பங்களிப்பை அளிக்கக்கூடிய, தமிழக பாஜகவின் மாநில நிர்வாகத்தில் இறைவன் திருவருளால் முக்கிய பங்கு வகிப்பேன் என்ற நம்பிக்கை உடன் செய்தி தொடர்பாளர் பணியில் இருந்து விடைபெறுகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“ஊழல் பெருச்சாளிகள்... தமிழக பாஜகவை மோடி, அமித் ஷா தூய்மைப்படுத்த வேண்டும்” - ஏ.என்.எஸ்.பிரசாத்
விஜய் ஆட்சி அமைக்க இடதுசாரிகள் ஆதரவு: 118-க்கு இன்னும் 2 மட்டுமே தேவை!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in