

சீர்காழி: ஈரானிய கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சீர்காழியைச் சேர்ந்த மேலும் ஒரு மீனவர் இன்று உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் தொடுவாய் சுனாமி நகர் மாவீரன் (40), கீழமூவர்க்கரை சங்கர் (39), திருமுல்லைவாசல் பால்ராஜ், கடலூர் மாவட்டம் சொத்திக்குப்பம் மணிகண்டன் ஆகியோர் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.
இதனிடையே, ஆக.10-ம் தேதி இரவு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஈரானிய கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகில் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ஈரானிய கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் மாவீரன் பலத்த காயம் அடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த சங்கர், சவுதி அரேபியா ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், மற்ற 2 பேரும் சிகிச்சைக்குப் பிறகு வசிப்பிடம் திரும்பினர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சங்கர் இன்று உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கருக்கு மனைவி அமுதா, மகன், மகள் உள்ளனர். சங்கர் உயிரிழந்த தகவல், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த மீனவர்கள் மாவீரன், சங்கர் ஆகியோரின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.