

சென்னை: காயிதே மில்லத் நினைவாக ஆண்டுதோறும் திருள்ளுவர் திருநாளன்று விருது வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் அறிவிப்பில் சில முன்னெடுப்புகள் வரவேற்கத்தக்கனவாக இருக்கின்றன. அதேசமயம் சில அறிவிப்புகள் அரசின் சிறுபான்மையினர் தாஜா போக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது. இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
திருவள்ளுவர் தினத்தில் காயிதே மில்லத் பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சர்க்கரைப் பொங்கலுக்கு வடகறி என கேலியாக சொல்வது போல் இருக்கிறது. இது தெய்வப்புலவர் திருவள்ளுவரை அவமதிக்கும் செயலாகும். இதை முதல்வர் விஜய் உணர வேண்டும்.
மதத்தின் அடிப்படையில் தேசப்பிரிவினையை ஆதரிப்பதாக காயிதேமில்லத்தின் கொள்கை இருந்தது. பாகிஸ்தான் பிரிவினையை பகிரங்கமாக ஆதரித்தவர் அவர்.
மேலும், அழுதுகொண்டே பாகிஸ்தானை முஸ்லிம்கள் பெற்றார்கள்; இந்த நாட்டில் தங்கியுள்ள இஸ்லாமியர்கள், சிரித்துக்கொண்டே இந்தியாவை இஸ்லாம் மதத்தின் நாடாக மாற்றுவோம் என்று பேசிய முஸ்லிம் லீகின் தலைவராக இருந்தவர்.
காயிதேமில்லத்தின் தமிழ் மீதான பற்று எப்படிப்பட்டது? என்பதை அவரது செயல்பாடு காட்டிக் கொடுக்கிறது. திமுகவின் சிறுபான்மை தாஜா போக்கில் தவெக செல்வது தமிழகத்திற்கு ஆபத்தாகும்.
திருக்குறள் தந்த திருவள்ளுவரின் தெய்வீக வாழ்வியல் முறையைப் போற்றி வாழ்ந்த தமிழறிஞர்களை இந்த ஆட்சியாளருக்குத் தெரியவில்லை.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல தமிழையும் சிறுபான்மையினரையும் மையப்படுத்தி காயிதே மில்லத் பெயரில் விருது அறிவித்திருப்பது தமிழையும், தெய்வப்புலவரையும் அவமதிக்கும் செயலாகும்.
இது ஒரு வரலாற்று பிழை என்பது இந்து முன்னணியின் கருத்து. தமிழக மக்கள் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மதத்தின் பெயரால் ஹஜ் மானியம் வழங்குவதை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. நீதிமன்றத்தின் கருத்தை மதிக்காமல் திமுக செயல்பட்டது. தற்போதைய தவெக அரசும், அதனை விரிவு படுத்தி ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் அதிகமாக மானியம் அறிவித்துள்ளது. இது ஜனநாயக கேலிக்கூத்து.
இந்த இரண்டு அறிவிப்புகளையும் இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழக அரசு வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பில், கண்ணியமிகு காயிதே மில்லத்தின் வரலாற்றுப் பெருமையைப் போற்றும் வகையிலும், தமிழ்மொழி மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பற்றினைக் கொண்டாடும் வகையிலும் ஒரு புதிய விருது ஆண்டுதோறும் திருள்ளுவர் திருநாளன்று காயிதே மில்லத் நினைவாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி மூலம் முதல்முறையாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழங்கப்படும் 25,000 ரூபாய் மானியம், 35,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.