

அண்ணாமலை
சென்னை: ‘தமிழகத்தில் விதிகளை மீறி செயல்படும் 129 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்’ என முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கடிதம் அனுப்பி உள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் விஜய்க்கு, ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: ‘தமிழக அரசு கடந்த மே 12-ம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் செயல்படும் 717 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளை மூட உத்தரவிட்டதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.
2019-ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி தமிழக மக்கள் தொகையில் 14.2 சதவீதம் பேர் மது அருந்துபவர்களாக இருந்தனர். ஆனால் 2026-ல் வெளியான தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பின்படி, 2023-24 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 23.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
5 ஆண்டுகளில் சுமார் 10 சதவீதம் அதிகரிப்பு என்பது கவலைக்குரியது. தமிழகத்தின் தங்கச்சந்தை மதிப்பு ரூ.90 ஆயிரம் கோடி என்றால், டாஸ்மாக் மூலம் வரும் வருவாய் மட்டும் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளது. இது மக்களின் சேமிப்பு மற்றும் ஆரோக்கியத்தைப் பெருமளவில் பாதிக்கிறது.
அரசு குறிப்பிட்ட சுற்றளவுக்குள் 717 கடைகள் மட்டுமே உள்ளனவா என்பதை அறிய நாங்கள் சிறிய ஆய்வு ஒன்றை நடத்தினோம். மாநிலம் முழுவதும் ஆய்வு செய்ததில், 500 மீட்டர் சுற்றளவுக்குள் விதிகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வரும் 129 டாஸ்மாக் கடைகளின் பட்டியலைத் தயார் செய்துள்ளோம்.
அரசு அறிவித்த விதிமுறைகளின்படி செயல்படாத இந்த 129 டாஸ்மாக் கடைகளையும் கண்டறிந்து, அவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.