

லண்டனில் நடந்த கருத்தரங்கில் பேசுகிறார் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை.
சென்னை: தமிழகத்தில் ஒரு லட்சம் தலைவர்களை உருவாக்கிய பிறகு அரசியல் கட்சி தொடங்குவதாக லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை தெரிவித்தார்.
‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் இங்கிலாந்து (UK) பிரிவு சார்பில் ‘தொலைநோக்குப் பார்வை, தலைமைத்துவப் பெண்கள் 2026’ என்ற தலைப்பில் லண்டன் ஹவுன்ஸ்லோவில் உள்ள கிரான்ஃபோர்ட் கம்யூனிட்டி கல்லூரியில் கடந்த 5-ம் தேதி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, மருத்துவம், அரசியல், சமூக சேவை என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த 37 தமிழ்ப் பெண்களுக்கு விருதுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மாற்றத்தை கொண்டுவர வேண்டும், நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு செயல்படுகிறது. எனவே, நாம் ஒவ்வொரு அடியையும் மெதுவாக, தெளிவாக எடுத்து வைக்க வேண்டும். கடந்த ஆக.3-ம் தேதி ஒரே நாளில் 80 கோடி மரக்கன்றுகளை நட்டு உலகையே வியக்க வைத்தது எத்தியோப்பியா. நமது கனவுகள், இலக்குகள் பெரியது.
எனவே, அதேபோன்ற ஒரு மாபெரும் இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். தமிழகத்தில் 50 லட்சம் மரக்கன்றுகள் நடுவது நம் லட்சியம். இதுவரை 9 லட்சம் நட்டுள்ளோம். தமிழகத்தில் ஏற்கெனவே 16 கட்சிகள் உள்ளன. இதில் 17-வது கட்சியாக நம் இயக்கம் இருப்பதில் விருப்பம் இல்லை.
நமக்கு தேவை மற்றுமொரு கட்சி அல்ல; ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமையான தலைமை. 2027 அக்டோபருக்குள் தமிழகத்தில் ஒரு லட்சம் தகுதியான தலைவர்களை உருவாக்குவதே எனது இலக்கு. தலைவர்களை உருவாக்கிய பிறகு, மக்களே நம்மை கட்சி தொடங்க அழைப்பார்கள். அப்போது கட்சி தொடங்குவோம். இதற்காக கோவையில் ‘கலாம் எதிக்ஸ் மற்றும் பாலிடிக்ஸ் மையம்’ அக்.15-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
2027 அக்டோபருக்கு பிறகு மிகப்பெரிய மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். ஓரிரு மாதங்களில், தஞ்சாவூர், ராமநாதபுரம், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் விவசாயம், திறன் மேம்பாட்டு மையங்களை தொடங்க உள்ளோம்.
அறிவு நிலை மாற்றம்: தமிழகத்தில் 1960-ல் நடந்தது உணர்ச்சி நிலை மாற்றம். 2026-ல் நடந்தது மயக்க நிலை மாற்றம். 60 ஆண்டுகளாக உடைக்க முடியாத ஒரு விஷயத்தை மயக்க நிலை மாற்றம் உடைத்திருக்கிறது. இனி, அடுத்து நடக்கக்கூடிய அறிவு நிலை மாற்றத்துக்காக நாம் பாடுபட வேண்டும். தகுதியானவர்கள் எம்எல்ஏக்களாக வரவேண்டும்.
பாஜகவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து, நிறைய விஷயங்களையும் செய்தோம். கட்சிக்கும், எனக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால், எந்தவித தாக்கமும் ஏற்படவில்லை என்பதுதான் வருத்தம்.
தமிழகம் அறிவுசார் புரட்சியை நோக்கி நகர வேண்டும். லண்டனில் இருக்கும் தமிழர்கள் தமிழகத்துக்கு வெறும் பணத்தை மட்டுமின்றி, உங்கள் அனுபவம், அறிவையும் பகிர வேண்டும். தமிழக மாணவர்கள் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேர வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல் போன்றவற்றில் உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.