

தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததைக் காரணம் காட்டி, பாஜக தேர்தல் சுற்றுப் பயணப் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார் அண்ணாமலை. ஆனால், அவர் விலகிப் போனாலும் அவரது விசுவாசிகள் அவரை விடுவதாக இல்லை.
அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விடுவித்ததுமே நயினாரின் நெல்லை மாவட்டத்திலும் பழனிசாமியின் எடப்பாடியிலும் அண்ணாமலை நற்பணி மன்றங்கள் உதயமாகின. ”இதையெல்லாம் செய்யாதீர்கள்” என்று அண்ணாமலை அன்போடு கேட்டுக் கொண்டாலும் தமிழகம் முழுக்க மன்றக் கிளைகளைப் பரப்புவதை அவரது ஆதரவாளர்கள் நிறுத்தவில்லை. இன்றைய தேதியில், பாஜக-வின் அமைப்பு ரீதியான 58 மாவட்டங்களில் அண்ணாமலை நற்பணி மன்றத்துக்கு கிளைகள் இருப்பதாக அவரது விசுவாசிகள் அகம் மகிழ்ந்து சொல்கிறார்கள்.
இந்த நிலையில், தமிழகம் முழுமைக்கும் இருக்கும் அண்ணாமலை நற்பணி மன்ற நிர்வாகிகள் நாளை (பிப்ரவரி 8) நெல்லையில் உள்ள மன்றத் தலைமை அலுவலகத்தில் கூடிப் பேசுகிறார்கள். அண்ணாமலை விசுவாசிகள் திடீரென இப்படியொரு கூட்டத்தைக் கூட்டுவது குறித்து பாஜக வட்டாரத்திலேயே பரபரப்பாகப் பேசப்படும் நிலையில், கூட்டத்துக்கான காரணம் குறித்து அண்ணாமலை நற்பணி மன்றத்தின் மாநிலத் தலைவரான ச.வேல்கண்ணனிடம் கேட்டோம்.
“தமிழகத்திலுள்ள 58 கட்சி மாவட்டங்களில் மட்டுமல்லாது கர்நாடகம், புதுச்சேரி, புதுடில்லியிலும் நற்பணிமன்றத்தை தொடங்கியிருக்கிறார்கள். விரைவில் இலங்கையிலும் அண்ணாமலை நற்பணிமன்றம் தொடங்கப்படஉள்ளது.
நாங்களாக இங்கெல்லாம் நற்பணிமன்ற கிளைகளை தொடங்க முயற்சி எடுக்கவில்லை. அங்குள்ள அண்ணாமலை ஆதரவாளர்களே முயற்சி எடுத்து எங்களுடன் தொடர்பு கொண்டு மன்றங்களை தொடங்கியுள்ளனர். ஏழைகளுக்கு உதவிடுவது, மரக் கன்றுகளை வழங்குவது, இலவச மருத்துவ முகாம்களை நடத்துவது என பல்வேறு நலப் பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம்.
நாளை நடக்கவிருக்கும் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கிறார்கள். அண்ணாமலையை எம்எல்ஏ-வாக்கி சட்டப் பேரவைக்கு அனுப்புவது தான் எங்களது நோக்கம். எந்தத் தொகுதியில் அவர் நின்றாலும் நற்பணி மன்றத்தினர் அனைவரும் அங்கு முகாமிட்டு அவரது வெற்றிக்கு உழைப்போம்; அவரை நிச்சயம் ஜெயிக்க வைப்போம். அவர் தேர்தலில் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். பாஜக விருப்ப மனு பெறும்போது, நாங்குநேரி தொகுதியில் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என அவருக்காக 500 பேருக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளிக்க இருக்கிறோம். இது தொடர்பாக ஆலோசிக்கவும், தீர்மானங்களை எடுக்கவுமே நாளை ஆலோசனைக் கூட்டம் கூட்டியிருக்கிறோம்” என்றார்.