

சென்னை: அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ள நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நீதித்துறை நிர்வாகத்தை தமிழக காவல்துறை ஒட்டு மொத்தமாக சீர்குலைத்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை அண்ணா நகரை சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸார் தாக்கியதாக புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இழப்பீடு வழங்கக் கோரியும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சிறுமியின் தாயாரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, போக்சோ வழக்கின் விதிமுறைகளை மீறிய காவல்துறை அதிகாரிகள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், அவர்கள் மீதான விசாரணைநிலை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி, இந்த வழக்கு இதே அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி தாக்கல் செய்த அறிக்கையில், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக விசாரணை நடத்த ஜன.4-ம் தேதி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், இந்த வழக்கில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிறுமியின் பெற்றோரிடம் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும், வழக்கில் யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் கடந்த 2024 அக்டோபரில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து, தவறு இழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. ஆனால். ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 4-ம் தேதிதான் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனகடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், நீதித்துறை நிர்வாகத்தை தமிழக காவல்துறை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்து விட்டது என்றும், காவல் துறை நினைத்தால் ஒரே வாரத்தில் விசாரணையை நடத்தி முடிக்க முடியும். இழுத்தடிக்க வேண்டுமென நினைத்தால் விசாரணையை 10 ஆண்டுகள் வரைக்கூட இழுத்தடிக்க முடியும் என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.