

சென்னை: “எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணையச் சொல்லி என்னை போலீஸார் கட்டாயப்படுத்தினார்கள்” என திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைதாகி, ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகு போலீஸார் அழைத்துச் சென்றபோது செய்தியாளர்களிடம் குமுறிய அனிதா ராதாகிருஷ்ணன், “எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணையச் சொல்லி போலீஸார் என்னைக் கட்டாயப்படுத்தினார்கள். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. திமுகவில் உறுதியாக இருப்பேன்.
எந்த அடக்குமுறைக்கும் அஞ்ச மாட்டோம். நான் தவறு செய்யவில்லை. பொய் வழக்குப் போட்டு யாரும் அடக்க முடியாது. விஜய் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் நாங்கள் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். நாங்கள் என்ன கொலையா செய்துவிட்டோம்?” என்றார் அனிதா ராதாகிருஷ்ணன்.
முன்னதாக, திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பகுதியில் ஜூன் 20-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய, திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக, தவெக நகரச் செயலாளர் செல்வம், ஆத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை காவல் துறையினர் இன்று கைது செய்தனர். பின்னர், அவரிடம் ஐந்து மணி நேரம் விசாரணை நடந்தது. அதன்பின் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.