

பாமக தலைவர் அன்புமணி
சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய அளவில் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஓபிசி எனப்படும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எண்ணிக்கையை கணக்கிட மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் கடைபிடிக்கப்படும் ஓபிசி சாதிகள் பட்டியலை இணைத்து பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
ஆனால், அந்த பட்டியலில் இருப்பவை வகுப்புகள் தானே தவிர, சாதிகள் இல்லை என்பதால் அந்த முடிவு கைவிடப்பட்டதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மத்திய அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கான கூறப்படும் பலவீனமான காரணம்தானே தவிர ஏற்றுக்கொள்ளத்தக்க வாதம் அல்ல.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கமும் சமூகநீதி வழங்குவது தான். அவ்வாறு இருக்கும் போது, சில வகுப்புகளை சாதிகளாக பட்டியலிட்டு பதிவு செய்வதால் எந்த குழப்பமும் ஏற்பட்டுவிடாது.
எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, சாதியின் பெயரை மக்களிடம் கேட்டு, பதிவு செய்யும் முறையைகைவிட்டு, அதற்கு பதிலாக கணக்கெடுப்புக்கான செயலியில் ஓபிசி சாதிகளின் பட்டியலை இணைத்து அதிலிருந்து சாதியின் பெயரையும் எண்ணையும் தேர்வு செய்யும் முறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும். இதுதொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணையை ரத்துசெய்துவிட்டு, புதிய ஆணையை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.