

சென்னை: கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள அரவை பருவத்தில், 10.25 சதவீத சர்க்கரை சத்து கொண்ட கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.3,650 ஆகவும், தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.3,383 ஆகவும் உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கொள்முதல் விலையான ரூ.3,290 உடன் ஒப்பிடும் போது இது ரூ.93, அதாவது 2.82 சதவீதம் மட்டுமே அதிகமாகும். முன்னதாக 2024-25ம் ஆண்டில் இதே வகையான கரும்புக்கு ரூ.3,151 வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு அதைவிட ரூ.139 கூடுதலாக கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் பாதியளவு மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. 10.25 சதவீத சர்க்கரை சத்து கொண்ட ஒரு டன் கரும்பை சாகுபடி செய்ய ரூ.1,820 மட்டுமே செலவு ஆவதாக மத்திய அரசு கணக்கிடுகிறது.
ஆனால், ஒரு டன் கரும்பு சாகுபடி செய்வதற்கு ஏறக்குறைய ரூ.3,300 வரை செலவு ஆவதாக உழவர் அமைப்புகள் கூறுகின்றன. தொழிலாளர்கள் கூலி, குத்தகை உள்ளிட்ட பல செலவுகளை மத்திய அரசு கணக்கில் சேர்க்காதது தான் விலை மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட காரணமாகும்.
எனவே, தற்போது நிர்ணயிக்கப் பட்டுள்ள கொள்முதல் விலையை ரூ.500 ஆக மத்திய அரசு அதிகரிக்க வேண்டும். மீதமுள்ள ரூ.617-ஐ தமிழகத்தில் புதிதாக அமையும் அரசு ஊக்கத் தொகையாக வழங்கி விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.4,500 கொள்முதல் விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.