

சென்னை: மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பால ஊழலை மறைக்க திமுக அரசு என்ன தான் ஏமாற்று வேலைகளை செய்தாலும் ஊழலுக்கான தண்டனையிலிருந்து தப்ப முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் எல் வடிவ மேம்பாலம் தரமற்றும், பலவீனமாகவும், அதிர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் கட்டப்பட்டிருப்பதாக தொடர்ந்து நான் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், இப்போது மேம்பாலத்தின் மீது அவசர, அவசரமாக தார்ச்சாலை அமைத்திருக்கிறது. உலகிலேயே புதிதாக அமைக்கப்பட்ட கான்க்ரீட் பாலத்தின் மீது தார்ச்சாலை அமைத்த ஒரே கம்பெனி கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டைச் சீரழித்த திமுக கம்பெனி தான். இத்தகைய தார்பூச்சு வேலைகளின் மூலம் பாலம் கட்டுவதில் நடந்த ஊழலை மூடி மறைக்க முடியாது.
எல் வடிவ மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் வரை அதை போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க வரும் தேவதையாகப் பார்த்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அந்தப் பாலம் திறக்கப்பட்ட அடுத்த நிமிடத்திலிருந்து அதை உயிரைப் பறிக்க வந்த எமனாகப் பார்க்கத் தொடங்கி விட்டனர். அந்த அளவுக்கு மத்திய கைலாஷ் பாலத்தை தரமற்றதாக திமுக அரசு கட்டியிருந்தது. அனைத்திலும் ஊழல் செய்து கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் அடங்காத பேராசை தான் இதற்குக் காரணம் ஆகும்.
மத்திய கைலாஷ் பாலம் தரமற்று இருப்பதற்கு காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து வல்லுனர்கள் தெரிவித்திருந்த கருத்துகளை கடந்த 3-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன். திமுக அரசுக்கு உண்மையாகவே மக்கள் நலனில் அக்கறை இருந்திருந்தால், அதைத் தாண்டி நேர்மையான அரசாக இருந்திருந்தால் பாலத்தின் பலவீனத்திற்கு காரணம் என்ன? என்பது குறித்து வல்லுனர் குழு அமைத்து ஆய்வு செய்து சரி செய்ய முயற்சி செய்திருக்க வேண்டும்; இன்னொருபக்கம் பாலம் தரமற்று கட்டப்பட்டதன் பின்னணியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணைக்கு ஆணையிட்டிருக்க வேண்டும்.
ஆனால், அதையெல்லாம் செய்யாமல் பாலத்தின் மீது 25 மி.மீ அளவுக்கு தார்ச்சாலை அமைத்திருப்பதன் மூலம், பாலம் தரமற்று அமைக்கப்பட்டிருப்பதையும், அதன் பின்னணியில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதையும் மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கும் திமுக அரசு, இன்னொருபக்கம் ஊழலை தார்ப்பூசி மூடி மறைக்க முயற்சி செய்திருக்கிறது. திமுக அரசின் இந்த முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது.
2015-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய சாலைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட விதிகளின்படி, அதிக போக்குவரத்து இல்லாத கிராமப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாலங்களின் மேற்பரப்பில் வேண்டுமானால் தார் சாலை அமைக்கலாம்; நகர்ப்புறங்களில் அவ்வாறு செய்யக்கூடாது. ஆனால், இதிலும் விதிகளை மீறி தார்ச்சாலை அமைத்திருக்கிறது திமுக அரசு. விதி மீறலுக்கு அதிகாரிகளும் துணையாக இருந்துள்ளனர்.
எல் வடிவ மேம்பாலம் பலவீனமாக இருப்பதற்காக காரணங்களில் முதன்மையானது,‘‘அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் பயணிக்கக் கூடிய பாலத்தைத் தாங்குவதற்காக பொருத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள் போதிய வலுவற்றவையாக இருக்கக் கூடும். அதிக வாகனங்களைத் தாங்கும் அளவுக்கு இரும்புக் கம்பிகள் பொருத்தப்படாததும் தான்” என்று கட்டுமான வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
இத்தகைய சூழலில் பாலத்தின் மீது 25 மி.மீ அளவுக்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டால் பாலத்தின் எடை அதிகரிக்கும். அதனால் பாலம் விரைவாகவே வலுவிழந்து விடும். இவை அனைத்தும் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியும் என்றாலும் இப்போது பழியிலிருந்து தப்புவதற்காகவே இந்த ஏற்பாடுகளையெல்லாம் செய்துள்ளனர். ஆட்சியாளர்கள் செய்துள்ள இந்த ஏற்பாடும் பயன் தராது. இன்னும் சில வாரங்களில் பாலம் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விடும்.
மேம்பாலத்தின் மீது தார்ச்சாலை அமைப்பது போன்ற பயனற்ற செயல்களை செய்வதற்கு பதிலாக கீழ்க்கண்ட நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும்.
1. எல் வடிவ மேம்பாலத்தின் குறைபாடுகள் குறித்து பாலத்திற்கு அடுத்த வளாகத்தில் உள்ள ஐஐடி பேராசிரியர்கள் அடங்கிய குழுவைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும். அதில் தெரியவரும் தரவுகளின் அடிப்படையில் பாலத்தை வலுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
2. தரமற்ற முறையில் எல் வடிவ பாலத்தைக் கட்டிய ஒப்பந்தததாரரை உடனடியாக கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்; பாலம் கட்டியதற்கான ஒப்பந்தத் தொகையில் ஏதேனும் நிலுவை இருந்தால் அதை வழங்காமல் நிறுத்தி வைக்க வேண்டும்.
3. மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் கட்டப் பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.
இவற்றைச் செய்யாமல் எல் வடிவ மேம்பால ஊழலை மறைக்க திமுக அரசு என்ன தான் ஏமாற்று வேலைகளை செய்தாலும் ஊழலுக்கான தண்டனையிலிருந்து தப்ப முடியாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், எல் வடிவ மேம்பாலம் கட்டப்பட்டதில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணைக்கு ஆணையிடப்படும். அப்போது ஊழலுக்கு காரணமான அனைவரும் நீதியின் தண்டனையை கண்டிப்பாக அனுபவித்தே தீர வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.