

அன்புமணி
சென்னை: “நகராட்சி நிர்வாகத் துறையின் பணி நியமன ஊழல் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், திமுகவின் ஊழல் கோட்டை இடிந்து தரைமட்டமாகும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்க ஒரு பணிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வீதம் மொத்தம் ரூ.888 கோடி அளவுக்கு கையூட்டு பெறப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யும்படி தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
திமுக அரசின் அனைத்துத் துறை ஊழல்களை அம்பலப்படுத்தும் வகையிலும், அரசு நிர்வாகத்தை தூய்மைப்படுத்தும் நோக்குடனும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது. திமுக ஆட்சி என்றாலே ஊழல் தான் என்று கூறும் அளவுக்கு கடந்த ஐந்தாண்டுகளாக அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடி வருகிறது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை நியமிப்பதற்காக ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டதையும், அப்பணம் ஹவாலா முறையில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதையும் சோதனைகளின் மூலம் கண்டறிந்த அமலாக்கத்துறை, அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி 232 பக்க ஆவணங்களுடன் கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் நாள் தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்த ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அக்டோபர் 29ஆம் நாள் நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், இது குறித்து எந்த விசாரணையும் நடத்த முடியாது என்று திமுக அரசு மறுத்து வந்தது.
வழக்குப் பதிவு செய்ய ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தை ஏமாற்றும் நோக்குடன் இந்த ஊழல் குறித்து முதல்கட்ட விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருப்பதாகவும், 180 நாள்களில் அந்த விசாரணை முடிந்த பிறகு தான் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் திமுக அரசு கூறி வந்தது. ஆனால், அதையெல்லாம் ஏற்க மறுத்து விட்ட சென்னை உயர்நீதிமன்றம், ரூ.888 கோடி ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையிட்டுள்ளது.
இந்த ஊழலை மூடி மறைக்க திமுக அரசு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகவும் கடுமையானவை. ‘‘தமிழக காவல் துறை மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. இந்த வழக்கின் விசாரணையை வேறு புலனாய்வு அமைப்புக்கு அனுப்புவதற்கு தான் நான் நினைத்தோம். ஆனால், இது குறித்து முதல் கட்ட விசாரணையை கையூட்டுத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனால் அந்த முடிவை கைவிடுகிறோம். இந்த விவகாரத்தில் முதல்கட்ட விசாரணைக்கு தேவையில்லை. உடனடியாக முதன்மை வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்க வேண்டும்” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். திமுக அரசுக்கு உண்மையாகவே அடிப்படையான சுயமரியாதை உணர்வு இருந்திருந்தால், இனியும் பதவியில் நீடிக்கும் தகுதி தங்களுக்கு இல்லை என்று கூறி பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால், ஊழலில் திளைப்பதை வாடிக்கையாகக் கொண்ட திமுக, என்ன தான் கண்டனங்களுக்கு ஆளானாலும் பதவியை விட்டு விலகாது.
நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்த ஊழல்களில் ஒன்றின் மீது மட்டுமே விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அதே துறையில் பல்வேறு ஒப்பந்தங்களை வழங்கியதில் ரூ.1,020 கோடி அளவுக்கு கையூட்டு மற்றும் கட்சி நிதி வசூலிக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை டிசம்பர் மாதம் முதல் வாரத்திலும், அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்வதற்காகவும், அவர்கள் விரும்பும் வளமான பதவிகளில் அமர்த்துவதற்காக ரூ.7 லட்சம் முதல் சில கோடிகள் வீதம் ரூ. 366 கையூட்டாக வசூலிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை கடந்த ஜனவரி மாதமும் அமலாக்கத்துறை தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் அனுப்பியிருந்தது.
இவை தவிர தமிழ்நாட்டில் ரூ.4,730 கோடி அளவுக்கு நடைபெற்றுள்ள ஆற்று மணல் கொள்ளை ஊழல் தொடர்பாகவும் ஆதாரங்களை அனுப்பியுள்ள அமலாக்கத்துறை அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. ஆனால், அது குறித்தும் விசாரணை நடத்த திமுக அரசு மறுத்து வருகிறது.
இப்போது ரூ.888 கோடி பணி நியமன ஊழல் குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அதை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்த தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவு முன்வர வேண்டும்.
மேலும் ரூ.2000 கோடி கனிமவள ஊழல், ரூ.1240 கோடி நெல் கொள்முதல் ஊழல், ரூ.165 கோடி நெல் சரக்குந்து ஒப்பந்த ஊழல், பள்ளிக்கரணை சதுப்பு நில அடுக்குமாடி ஊழல், மது வரி ஏய்ப்பில் ரூ.1.82 லட்சம் கோடி ஊழல், ஆண்டுக்கு ரூ.5400 வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.27,000 கோடிக்கு பாட்டிலுக்கு ரூ.10 ஊழல், ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.75,000 கோடி மின் கொள்முதல் ஊழல் என திமுக ஆட்சியில் குறைந்தது ரூ. 6 லட்சம் கோடிக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படும் போது, அந்த ஊழல்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சர்களும் சிறைக்கு செல்லப் போவது உறுதி. ஊழல் மூலம் குவித்து வைத்திருக்கும் பணத்தைக் கொண்டு தான் அனைவரையும் விலைக்கு வாங்குவது உள்ளிட்ட அரசியலை திமுக செய்து வருகிறது.
நகராட்சி நிர்வாகத் துறையின் பணி நியமன ஊழல் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், திமுகவின் ஊழல் கோட்டை இடிந்து தரைமட்டமாகும். அதனால் மக்கள் மத்தியில் ஏற்படும் அதிர்வுகளால் வரும் தேர்தலில் திமுக அடியோடு துடைத்து எரியப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.