

தஞ்சை: “தமிழக மக்கள் எங்களுக்கு 40 எம்.பி.க்களை கொடுத்திருந்தால் நாங்கள் மேகேதாட்டு அணைத் திட்டத்தை தடுத்து நிறுத்தி இருப்போம்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது என வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காவிரி நீர் தமிழகத்துக்கு வந்தடையும் பிலுகுண்டுவில் இருந்து பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் கல்லணையை இன்று காலை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பொய் சொல்கிறார். கர்நாடகாவை விட தமிழகம்தான் அதிகம் பயன்பெறும் என்பது முதல் பொய்.
பெங்களுரு குடிநீர் தேவைக்காக என்பது 2-வது பொய். உச்ச நீதிமன்றம் அனுமதி என்பது 3-வது பொய். மேகேதாட்டுவில் அணைக் கட்டினால் தமிழகத்துக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். கே.ஆர்.எஸ் அணை மூலம் பெங்களுருக்கு தண்ணீர் கிடைக்கிறது. கர்நாடக அரசு காவிரி விவகாரத்தில் எந்த தீர்ப்பையும் மதிப்பதில்லை.
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகா தீவிரமாக வேலை செய்து வரும் நிலையில் தமிழகத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் பேரம் நடந்து வருகிறது. 2028-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக டி.கே.சிவக்குமார் அணை கட்ட முயற்சிக்கிறார்.
ராசி மணலில் அணைக்கட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. நாம் அங்கு அணைக்கட்டுவோம் என்றால் அதற்கு மாறாக அவர்கள் மேகேதாட்டுவில் அணைக்கட்டுவோம் என்பார்கள். எனவே, அந்த கோரிக்கை தற்போது தேவையில்லாது.
கர்நாடக அரசு தொடர்ந்து ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள். மேகேதாட்டு விவகாரத்தில் பல அமைப்புகல் பல விதமாக வழக்குகள் தொடர வேண்டும். நான் விரைவில் தமிழக நீர்வளத் துறை அமைச்சரை சந்திக்க உள்ளேன்.
தமிழக மக்கள் 40 எம்.பி.க்களை எங்களுக்கு கொடுத்திருந்தால் நாங்கள் மேகேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்திருப்போம்.
மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும். பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்திக்க வேண்டும். காவிரிக்காக எந்த எல்லைக்கும் செல்ல நான் தயாராக இருக்கிறேன். டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வைப்பது சரியான கோரிக்கை தான். அதை அரசு செயல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதை தீவிரமாக தடுக்க வேண்டும். அதற்காக இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் போல சாலைக்கு வந்து போராட வேண்டும்” என்று அவர் கூறினார்.