மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸ் வழக்கு: சென்னை உரிமையியல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸ் வழக்கு: சென்னை உரிமையியல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
Updated on
1 min read

சென்னை: பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் நாளைக்குள் பதில் அளிக்க அன்புமணிக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நிறுவனர் ராமதாஸை தலைவராகவும், அவர் நியமித்த நிர்வாகிகளையும் அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், உள்கட்சி பிரச்சினை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு எட்டப்படும் வரை, பாமகவின் சின்னமான மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி ராமதாஸ் சென்னை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உள் கட்சி விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது நிலுவையில் உள்ளது என்பதால், உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக் கொள்ளலாம் எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிரெண்ட்லி மேட்ச் ஆடுகிறது எனத் தெரிவித்ததுடன், மாம்பழம் சின்னத்தை கேட்டு சிவில் நீதிமன்றத்தை உடனடியாக நாட வேண்டும் என ராமதாஸ் தரப்புக்கு உத்தரவிட்டது. அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுவை மூன்றே நாட்களில் விசாரித்து முடிவை எடுக்க வேண்டும் எனவும் சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், மாம்பழம் சின்னம் விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு முன் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது அன்புமணி தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து நாளைக்குள் அன்புமணி தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நாளைக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸ் வழக்கு: சென்னை உரிமையியல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
“திமுக 175 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டி” - மு.க.ஸ்டாலின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in