“என்எல்சி ஒப்பந்த, தற்காலிக தொழிலாளர்கள் பணிப் பாதுகாப்பை உறுதி செய்க” - அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

“என்எல்சி ஒப்பந்த, தற்காலிக தொழிலாளர்கள் பணிப் பாதுகாப்பை உறுதி செய்க” - அரசுக்கு அன்புமணி  வலியுறுத்தல்
Updated on
2 min read

சென்னை: என்எல்சி நிறுவனத்தின் அத்துமீறல்களையும், துரோகங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு பணி நீக்கப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் 1, 1ஏ, 2 ஆகிய நிலக்கரி சுரங்கங்களின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 347 ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த சில வாரங்களில் மேலும் 713 பேரை பணி நீக்கம் செய்ய என்எல்சி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. என்எல்சி நிறுவனத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பணி நீக்கம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

என்எல்சி நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களை என்எல்சி நிறுவனம் ஒன்றன்பின் ஒன்றாக ரத்து செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 6 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த 11 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. அதன் காரணமாக 347 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். செப்.3-ம் தேதி (நாளை) இரு நிறுவனங்களின் இரு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு 64 பேர் பணி நீக்கப்படவுள்ளனர்.

நவ.16-ம் தேதி வரை மொத்தம் 13 நிறுவனங்களின் 27 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு மொத்தம் 1,060 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால், அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் நிலை உருவாகும். என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டால் அவர்களுக்கு இந்த நிலை நேராது. வட இந்தியர்களை நிரந்தரப் பணிகளில் அமர்த்தும் என்எல்சி நிறுவனம் தமிழர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக மட்டுமே அமர்த்தி கொத்தடிமைகளாக நடத்துகிறது.

என்எல்சி நிறுவனம் நிலக்கரியை வெட்டி எடுத்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடிகளை லாபமாக ஈட்டி வருகிறது. அதற்கு அடிப்படை நிலங்கள் தான். ஆனால், என்எல்சி நிறுவனத்திற்கு கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் அந்த நிலங்களை வழங்கியவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 1,827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் மொத்தம் 37,256 ஏக்கர் நிலங்களை வழங்கியுள்ளன. அவற்றில் 23 ஆயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படாத நிலையில், நிலமே வழங்காத வட இந்தியர்களுக்கு நிரந்தர வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.

நிலம் கொடுத்த மக்களுக்கு வேலை கூட வழங்காமல் நன்றி மறந்த துரோக நிறுவனமாகவே என்எல்சி நிறுவனம் செயல்பட்டு வருவதற்கு இதுவே சான்றாகும். இதுபோல் பல்வேறு காரணங்களால் தான் என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்று பாமக கூறி வருகிறது.

என்எல்சி நிறுவனத்தின் இந்த அத்துமீறல்களையும், துரோகங்களையும் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு பணி நீக்கப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கச் செய்ய வேண்டும். அங்கு பணியாற்றி வரும் தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்வதற்காக சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்தும்படியும் என்எல்சி நிறுவனத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

“என்எல்சி ஒப்பந்த, தற்காலிக தொழிலாளர்கள் பணிப் பாதுகாப்பை உறுதி செய்க” - அரசுக்கு அன்புமணி  வலியுறுத்தல்
படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூட திட்டமா? - அன்புமணி கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in