

பாமக தலைவர் அன்புமணி | கோப்புப் படம்
சென்னை: “மது வணிகத்தை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை அரசு கைவிட்டு, படிப்படியாக மதுக்கடைகளை மூடி, முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்,” என்று பாமக தலைவார் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்படாவிட்டால், தமிழர்களின் மரபணுவிலேயே மது மீதான மோகமும், அடிமைத் தனமும் பதிந்து விடும் என்று பொது சுகாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். இது எந்த வகையிலும் அதிர்ச்சியளிக்கவில்லை. மாறாக, தமிழ்நாடு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சூழலில், மிகச் சரியான தருணத்தில் ஊதப்பட்டிருக்கும் அபாய சங்காகவே இது தோன்றுகிறது.
தமிழக அரசின் மருத்துவத் துறையில் பொது சுகாதாரத்துறை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவரான மருத்துவர் குழந்தை சாமி தான் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். “தமிழகத்தில், 1971-ம் ஆண்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. அப்போது தொடங்கி, இப்போது வரையிலான 55 ஆண்டுகளில் இரண்டு தலைமுறையினர் மது குடிக்கின்றனர். இதனால், மது குடிப்பவர்களின் குழந்தைகளின் மரபணுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது.
இப்போதுள்ள மூன்றாவது தலைமுறையும் மதுவை தொடர்ந்து குடித்தால், அது தமிழர்களின் மரபணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, தமிழர்களை மது மீது மோகம் கொண்டவர்களாகவும், மதுவுக்கு அடிமையானவர்களாகவும் மாற்றிவிடும். அதற்கு பின் பிறக்கும் குழந்தைகள் மதுவுக்கு அடிமைகளாகவே பிறக்க வாய்ப்பு உள்ளது” என்று மருத்துவர் குழந்தைசாமி அவர்கள் எச்சரித்திருக்கிறார். அவரது எச்சரிக்கை உண்மை தான். இதையே தான் பாமகவும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது.
மதுவால் ஏற்படும் பாதிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து தான் வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மது குடிப்பவர்களை 60 நோய்கள் தான் தாக்குவதாக எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைக் காலமாக 200 நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மது அருந்துபவர்களுக்கு 7 வகையான புற்றுநோய்கள், கல்லீரல் இழைநார் வளர்ச்சி (Liver Cirrhosis), நிமோனியா, காசநோய், ஆண்மையிழப்பு போன்றவை அவற்றில் முக்கியமானவை ஆகும்.
சங்க இலக்கியங்களில் மட்டுமின்றி, மருத்துவ ஆராய்ச்சிகளிலும் தமிழர்கள் நோய்களை வென்றவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து 55 ஆண்டுகளாக மதுவைக் குடிப்பதால் அவர்களின் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இளம் வயதிலேயே தமிழர்கள் பல்வேறு நோய்களுக்கு அடிமையாகி வருகின்றனர். பொது சுகாதாரத் துறை வல்லுநர்களின் எச்சரிக்கை இந்தக் கருத்தை உறுதி செய்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்கள் காலத்திலேயே, 1937- 38ம் ஆண்டுகளில் இன்றைய தமிழ்நாட்டின் அங்கமாக இருக்கும் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் முழு மதுவிலக்கை ராஜாஜி ஏற்படுத்தினார். இந்தியா விடுதலையடைந்த காலத்தில் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ஒட்டுமொத்த சென்னை மாகாணத்திற்கும் மதுவிலக்கை நீட்டித்தார். அப்போது தொடங்கி 1971ம் ஆண்டு வரை 25 ஆண்டுகள் ஒரு தலைமுறையே மதுவை மறந்திருந்தது. 1971ம் ஆண்டில் ராஜாஜின் எச்சரிக்கையையும் மீறி சாராயக் கடைகளை திறந்து மதுவை வெள்ளமாக ஓட வைத்தது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிதான்.
கடந்த திமுக ஆட்சியில் மதுப் புழக்கம் புதிய பரிமாணத்தை அடைந்தது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 5,000 மதுக்கடைகள் இருந்த நிலையில், அவற்றையொட்டிய பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்துக் கடைகளை திறந்து, தெருவுக்கு தெரு மது கிடைப்பதை திமுக அரசு உறுதி செய்தது. 500 மதுக்கடைகளை மூடியதாக அறிவித்த திமுக அரசு, அதற்கு பதிலாக 1,200-க்கும் கூடுதலான மனமகிழ் மன்றங்களைத் திறந்தது. அதுமட்டுமின்றி, மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 284 குடிப்பகங்களிலும் மது வணிகத்தை திமுக அரசு நடத்தியது. இதனால் திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானார்கள்.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் செயல்பட்டு வந்த மதுக்கடைகள் மூடப்பட்ட போது, இந்த ஆட்சியில் மது கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், ரெஸ்டோ பார்களை திறக்க அனுமதி அளிக்கவும், அரசு மதுக்கடைகளை தனியார்மயமாக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் இந்த நம்பிக்கையை குலைத்துவிட்டன. மதுவைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தவெகவின் ஆட்சியும் திமுக ஆட்சியின் நீட்சியாகவே திகழுமோ என்ற கவலை தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழர்கள் நோயில்லா வாழ்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள். அவர்களின் வரலாற்றில் மதுவுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதில்லை. அப்படிப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தை நிரந்தரமான குடிகார சமுதாயமாக மாற்றிவிடக் கூடாது. எனவே, மது வணிகத்தை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை அரசு கைவிட்டு, படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று அன்புமணி கூறியுள்ளார்.