‘சரளைப்பட்டி கல் குவாரியில் இளைஞர் கொலையா?’ - விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்

‘சரளைப்பட்டி கல் குவாரியில் இளைஞர் கொலையா?’ - விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: “திமுக எம்எல்ஏ பழனியாண்டியின் கல் குவாரியில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டாரா, அதன் பின்னணியில் வேறு சதித் திட்டங்கள் உள்ளனவா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “திண்டுக்கல் மாவட்டம் சரளைப்பட்டியில் உள்ள கல் குவாரி ஒன்றில், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்ற இளைஞரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில் பல மர்மங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சரளைப்பட்டி கல் குவாரியை திருவரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவரது மகன் விஜயபாரதி பெயரில் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்ற இளைஞரை கடந்த 10 நாள்களாக காணவில்லை.

கருப்பசாமி காணாமல் போன சில நாள்களிலேயே சந்தேகத்தின் அடிப்படையில் அவரது உறுப்பினர்கள் கல் குவாரிக்கு சென்று விசாரித்த போது, அங்கு அவர் வரவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது அவரது உடல் அங்கிருந்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.

திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் சாகசங்கள் ஒட்டுமொத்த தமிழ்நாடும் அறிந்தவை தான். கரூர் பகுதியில் அவருக்கு சொந்தமான குவாரியில் நடக்கும் முறைகேடுகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தொலைகாட்சி செய்தியாளர்கள் குழுவை அவர், கடத்திச் சென்று தாக்கியதும், அந்த வழக்கில் அவர் கைது செய்யப்படாமல் இன்று வரை சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருப்பதையும் நாடே அறியும்.

எனவே, சரளைப்பட்டி கல் குவாரியில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டாரா. அதன் பின்னணியில் வேறு சதித் திட்டங்கள் உள்ளனவா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

‘சரளைப்பட்டி கல் குவாரியில் இளைஞர் கொலையா?’ - விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்
“இனியும் திமுகவின் ஏவல் துறையாக காவல் துறை செயல்படக் கூடாது” - நயினார் நாகேந்திரன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in