“சமூக நீதி சார்ந்த போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க சுற்றறிக்கையா?” - அன்புமணி கண்டனம்

பாமக தலைவர் அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி

Updated on
2 min read

சென்னை: நியாயமான கோரிக்கைகளுக்காக மாணவர்கள் நடத்தும் போராட்டங்களை ஒடுக்க அரசு முயல்வது சரியல்ல. இது தொடர்பாக கல்லூரிக் கல்வி ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கல்வி மற்றும் சமூகநீதி சார்ந்த போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நீதிக்காக போராடும் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை முடக்க தமிழக அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.

தமிழக கல்லூரிக் கல்வி ஆணையர் சார்பில் கடந்த 17-ஆம் தேதி அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், இடதுசாரிகள் மற்றும் காக்ரோச் ஜனதாக் கட்சி சார்பில் நடத்தப்படும் போராட்டங்களில் அரசு கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் தலைமையில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி நடைபெற்ற சட்டம் - ஒழுங்கு குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கல்வியும், சமூகநீதியும் தான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பவை ஆகும். அதற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எதிராக போராட்டம் நடத்துவது மாணவர்களின் கடமை ஆகும்.

அந்த போராட்டங்களால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாமல் தடுப்பது தான் அரசின் கடமையே தவிர, மாணவர்களை போராட்டங்களில் பங்கேற்க விடாமல் தடுப்பது அல்ல. போராட்டத்தில் பங்கேற்காமல் மாணவர்களை தடுக்க முயல்வது ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது ஆகும்.

நீட் தேர்வுக்கு எதிராக சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டார். அப்போராட்டத்தில் பேசும் போது,’’ "வாக்குரிமை, சொத்துரிமை அனைத்துமே தமிழ்நாடு போராடிதான் பெற்றது. மாணவர்களின் ஒற்றுமைக்கு நான் தலைவணங்குகிறேன்.

நீட் ஒழிப்பை சட்டபூர்வமாக்கி கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர போராடும் அனைவருக்கும் ஆதரவாக கட்சி வேறுபாடின்றி நாங்கள் ஆதரவு தருகிறோம்’’ என்று கூறினார். ஒருபுறம் அமைச்சரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார். இன்னொருபுறம் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை அரசு தடுக்கிறது. இது என்ன இரட்டை நிலைப்பாடு?

தமிழகத்தில், இந்தியாவில், உலகின் பல நாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியது மாணவர்கள் போராட்டம் தான். நியாயமான கோரிக்கைகளுக்காக அவர்கள் நடத்தும் போராட்டங்களை ஒடுக்க அரசு முயல்வது சரியல்ல. இது தொடர்பாக கல்லூரிக் கல்வி ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும். மாணவர்களின் அறவழி போராட்டத்தை அனுமதிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>பாமக தலைவர் அன்புமணி</p></div>
அயோத்தி போலீஸார் நால்வர் ராஜஸ்தானில் கைது: ரூ.2.80 லட்சம் லஞ்சம் வாங்க மாநிலம் விட்டு மாநிலம் சென்றபோது சிக்கினர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in