“வேளாண் இலவச மின் இணைப்புகளை ஆண்டுக்கு 1 லட்சமாக உயர்த்த வேண்டும்” - அன்புமணி

 அன்புமணி | கோப்புப் படம்

அன்புமணி | கோப்புப் படம்

Updated on: 
2 min read

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் 50 ஆயிரம் பேருக்கு இலவச வேளாண் மின் இணைப்புகளை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருப்பதை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார். அதேசமயம், இன்னும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பதால், வேளாண் இலவச மின் இணைப்புகளை ஆண்டுக்கு 1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நடப்பாண்டில் 50 ஆயிரம் பேருக்கு பல்வேறு பிரிவுகளில் இலவச வேளாண் மின் இணைப்புகளை வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக விவசாயிகளின் பல்லாண்டு கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இந்த நடவடிக்கையை அரசு எடுத்திருப்பதும், இதற்காக ரூ.127.56 கோடி மானியத்தை அரசே ஏற்க இருப்பதும் வரவேற்கத்தக்கவை.

மொத்தம் வழங்கப்படவுள்ள 50,000 இணைப்புகளில், சாதாரணப் பிரிவில் 20,000 இணைப்புகள், சுயநிதி பிரிவில் 3,372 இணைப்புகள், விரைவு திட்டத்தில் 25,282 இணைப்புகள் வழங்கப்படவுள்ளன. மீதமுள்ள 1346 இணைப்புகள் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்பட உள்ளன.

தட்கல் திட்டத்தில் இலவச வேளாண் மின் இணைப்பு பெறுவதற்காக 2025-ம் ஆண்டு திமுக அரசு வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து டிசம்பர் 31-ம் தேதி வரை 47,554 விவசாயிகள் விண்ணப்பித்தனர். இலவச மின்சார இணைப்புக்காக ரூ.2.50 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வீதம் விவசாயிகள் கட்டணம் செலுத்தினர்.

அதற்கு கடந்த 2023-ம் ஆண்டில் இதே தட்கல் திட்டத்தில் 12,566 விவசாயிகள் இலவச மின் இணைப்புக்காக விண்ணப்பித்திருந்தனர். அவர்களிடமிருந்து மொத்தமாக ரூ.1250 கோடிக்கும் கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்ட போதிலும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு கோரிய 60 ஆயிரம் பேர், சாதாரண திட்டத்தில் விண்ணப்பித்து இலவச மின்சாரத்திற்காக காத்திருக்கும் 4 லட்சம் பேர் என 4.60 லட்சம் பேருக்கும் உடனடியாக இலவச மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நான் வலியுறுத்தியிருந்தேன்.

அதைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையிலும் இதே கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணி வலியுறுத்தியிருந்தார். அதையேற்று மின் துறை அமைச்சர் அளித்த உத்தரவாதத்தின்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை ஓரளவாவது ஏற்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அதே நேரத்தில் இன்னும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இலவச மின் இணைப்புக்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் பலர் 13 ஆண்டுகளுக்கும் மேலாக மின் இணைப்பு கிடைக்காமல் காத்திருக்கின்றனர்.

விவசாயிகள் இலவச மின்சாரத்திற்காக 13 ஆண்டுகள் காத்துக்கிடப்பது கொடுமையானது. இப்போது ஆண்டுக்கு 40 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

இது போதுமானதல்ல. வேளாண் இலவச மின்சார இணைப்புகளை ஆண்டுக்கு 1 லட்சமாக உயர்த்த வேண்டும். அடுத்த 4 ஆண்டுகளில் விண்ணப்பித்த அனைவருக்கும் இலவச வேளாண் மின் இணைப்புகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p> அன்புமணி | கோப்புப் படம்</p></div>
அமைச்சர்களுக்கு முன்பே மருது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்திய திருப்பத்தூர் எம்எல்ஏ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in