

சென்னை: ரூ.400 கோடி முறைகேடு வழக்கில் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், விசாரணை முடிந்து இன்று மாலை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவ.6 வரை வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளை வழங்க, கட்சி நிதி என்ற பெயரில் ரூ.400 கோடி வரை வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாகத் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
பணப்பரிமாற்றம் குறித்தும், வேறு நபர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தும் அன்பில் மகேஸை போலீஸார் கடந்த 3 நாட்களாக தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி இன்று மாலை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்னிலையில் அன்பில் மகேஸை ஆஜர்படுத்தினர்.
அப்போது, அன்பில் மகேஸின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, “போலீஸார் உங்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தினார்களா?” என்று அன்பில் மகேஸைப் பார்த்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, அன்பில் மகேஸ், “போலீஸார் துன்புறுத்தவில்லை. முறையான உணவு வழங்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
பின்னர் அன்பில் மகேஸை நாளை மறுநாள் (நவ.6) வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து போலீஸார் மீண்டும் அவரை சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் திரண்டு இருந்த திமுகவினர் மத்தியில் அன்பில் மகேஸிடம் நலம் விசாரித்த திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் அன்பில் மகேஸைப் பார்த்து கண் கலங்கி, ‘தீபாவளி நேரத்தில் இப்படியா?’ என்றார். அதற்கு அன்பில் மகேஸ், ‘எதையும் சந்திப்போம் அக்கா... நீங்க கலங்காதீங்க... பார்த்து பத்திரமா ஊருக்குப் போங்க. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என ஆறுதல் கூறி பதிலுக்கு அன்பில் மகேஸும் கண் கலங்கினார்.
இந்நிலையில், அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மீதான விசாரணை இதே நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.