புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவியேற்பு: மே.20-ல் கூடுகிறது சட்டப்பேரவை

புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவியேற்பு: மே.20-ல் கூடுகிறது சட்டப்பேரவை
Updated on
2 min read

புதுச்சேரி: புதுவை மாநில சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் நியமிக்கப்பட்டார். எம்எல்ஏக்கள் உறுதிமொழி ஏற்க வரும் 20-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதாக அறிவித்தார்.

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. இக்கூட்டணியில் இடம் பெற்று வென்ற அதிமுக மாநிலச்செயலர் அன்பழகன் தற்காலிக சபாநாயகராக தேர்வானார். தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு விழா துணை நிலை ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் இன்று நடந்தது. இவ்விழாவில் முதலில் வந்தே மாதரம், தேசிய கீதம், தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

தொடர்ந்து பதவியேற்பு விழா நடந்தது. இதில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உறுதிமொழி வாசிக்க, அன்பழகன் எம்எல்ஏ உறுதிமொழி வாசித்து தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அன்பழகனுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், செல்வ கணபதி எம்.பி, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, திமுக, தவெக, லஜக, நேயன் மக்கள் கழகம் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் எம்எல்ஏ பங்கேற்கவில்லை.

மேலும் தலைமைச் செயலர் சரத்சவுகான் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு பேவைத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையிலுள்ள சட்டப்பேரவைத் தலைவர் அறைக்கு அன்பழகன் சென்றார். அப்போது முதல்வர் ரங்கசாமியிடம் காலில் விழுந்து ஆசி பெற்று இருக்கையில் அமர்ந்தார்.

புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்ற அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதுச்சேரியில் 16-வது சட்டப்பேரவையின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் உறுதி மொழி ஏற்க வரும் 20-ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதல்வர் ரங்கசாமி சட்டப்படி ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். அதை உறுதி செய்யும் விதத்தில் தான் போட்டியிட்டு வென்ற தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து கடிதம் தந்துள்ளார்.

இது எனது பரிசீலனையில் உள்ளது. இதன் மீது உரிய உத்தரவை பிறப்பிப்பேன். சட்டப்பேரவை செயலர் என்னிடம் அக்கடிதம் தந்துள்ளார். அதில் எந்த மாற்றமும் இல்லை 14 நாட்கள் அவகாசம் உள்ளது. தொகுதி ராஜினாமா விவரத்தை தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி தெரிவிப்போம். எம்எல்ஏக்கள் உறுதி மொழி ஏற்றப் பிறகு முதல்வர் பரிசீலனை அடிப்படையில் சட்டப்பேரவை தலைவர் தேர்தல் தேதியானது அறிவிக்கப்படும்.

எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் உறுதிமொழி ஏற்பு இணையதளங்களில் நேரடியாக ஒளிப்பரப்பாகும். மக்கள் கூடும் முக்கிய இடங்களில் அகண்ட திரைகளில் நேரடியாக பார்க்க ஏற்பாடு செய்யப்படும், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி செல்போனில் வாழ்த்து தெரிவித்தார். அனைத்துக் கட்சியினரும் பதவியேற்பில் பங்கேற்றது நெகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருந்தது,” என்று அன்பழகன் கூறினார்.

புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவியேற்பு: மே.20-ல் கூடுகிறது சட்டப்பேரவை
ஊட்டியில் தொடங்கியது 128-வது மலர் கண்காட்சி: 7 லட்சம் மலர்களில் அலங்காரங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in