என்.ஆனந்த் முதல் கீர்த்தனா வரை: 9 அமைச்சர்களின் பின்புலம் - ஒரு பார்வை

என்.ஆனந்த் முதல் கீர்த்தனா வரை: 9 அமைச்சர்களின் பின்புலம் - ஒரு பார்வை
Updated on
3 min read

தவெக தலைவர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். அவர்கள் குறித்த விவரம் வருமாறு...

என்.ஆனந்த்

காரைக்காலைச் சேர்ந்த ஆனந்த் (61), 2006-ம் ஆண்டு நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் புஸ்ஸி தொகுதியில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். அதனால் புஸ்ஸி ஆனந்த் என்று அழைக்கப்படுகிறார்.

8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், பின்னர் விஜய்யின் ரசிகர் மன்றத்தில் இணைந்து, புதுச்சேரி விஜய் ரசிகர் மன்றத்தின் கவுரவச் செயலாளராக மாறினார். முதலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் மனதில் இடம் பிடித்து, பின்பு விஜய்க்கும் நெருக்கமானார்.

அதன்பின் அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்தார். விஜய் கட்சி தொடங்கியவுடன் தனது குடியிருப்பை தமிழகத்துக்கு மாற்றி, வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக்கொண்டார்.

தவெகவின் 2-வது பெரிய தலைவராக அறியப்படும் அவர் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். இந்த தேர்தலில் சென்னை தி.நகரில் களமிறங்கி வென்ற ஆனந்துக்கு, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் எம்எல்ஏவான நபர் என்ற பெருமை கிடைத்துள்ளது. தற்போது விஜய்யின் அமைச்சரவையிலும் 2-வது இடம்பிடித்து, முக்கிய துறையான ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறையை தனதாக்கியுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா

திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட ஆதவ் அர்ஜுனா (43) சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளநிலை (அரசியல் அறிவியல்) பட்டம் பெற்றுள்ளார். லாட்டரி மார்ட்டினின் மருமகனான (மகளின் கணவர்) இவர், திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் நெருங்கிய நண்பராக மாறினார்.

பின்னர் 2016-ல் திமுகவில் இணைந்தார். 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வரை திமுகவுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோருடன் சேர்ந்து பின்னணியில் பணியாற்றினார். அதன்பின் ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ என்ற தேர்தல் வியூக நிறுவனத்தைத் தொடங்கினார். மேலும், 2024-ல் விசிகவில் இணைந்து, துணை பொதுச் செயலாளரானார்.

அதன் பின்னர், தவெகவில் இணைந்து, தேர்தல் மேலாண்மை பொதுச்செயலராக உள்ளார். விஜய்யின் நம்பிக்கைக்குரிய நபராக திகழ்கிறார். இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் தமிழ்நாடு ஒலிம்பிக் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வரும் ஆதவ் அர்ஜுனா மீது கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்கு மற்றும் குற்றவியல் வழக்குகள் உள்ளன.

இந்தத் தேர்தலில் சென்னை வில்லி வாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஆதவ் அர்ஜுனாவுக்கு, அமைச்சரவையில் பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அருண்ராஜ்

நாமக்கல் குமாரமங்கலத்தைச் சேர்ந்த அருண்ராஜ் (46), முன்னாள் ஐஆர்எஸ் அலுவலராவார். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 2002-ல் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர். சில ஆண்டுகள் கிருஷ்ணகிரியில் மருத்துவராகப் பணியாற்றியவர், சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்று மத்திய அரசின் வருமானவரித் துறையில் 2009-ம் ஆண்டு முதல் இருந்து பணியாற்றினார்.

தமிழகம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்றியவர், 2020-ல் விஜய் வீட்டில் இவர் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. 2025 மே மாதத்தில் தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அதன்பின் விஜய்யுடன் நெருக்கமாகி தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அவருக்கு கட்சியின் கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. நிர்வாக ரீதியாக விஜய்க்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கும் இடத்தில் இருக்கிறார்.

செங்கோட்டையன்

தவெகவில் இருப்பவர்களில் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட மூத்த தலைவர் செங்கோட்டையன்(77). ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த இவர், எம்ஜிஆர் 1972ல் அதிமுகவை தொடங்கியபோதே, அதில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டவர்.

1977, 1980, 1984, 1989, 1991, 2006, 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். இதுதவிர 1991–1996 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

2011–2016 அதிமுக ஆட்சியின் போது, அமைச்சராக நியமிக்கப்பட்டு, இடையில் நீக்கப் பட்டார். மீண்டும் 2016-ம் ஆண்டிலும் அவருக்கு அதிமுக தலைமை, கோபியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், பழனிசாமி முதல்வரான பின், அவருக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும், தவெகவில் இணைந்தார். அதன்பின் கோபியில் முதல்முறையாக தவெக வேட்பாளராக வெற்றி பெற்று அமைச்சராகியுள்ளார்.

வெங்கட்ரமணன்

மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற வெங்கட ரமணன் எம்பிஏ பட்டதாரி ஆவார்.சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளார். விஜய்யின் நீண்ட கால நண்பரான இவர், தற்போது தவெக கட்சியின் பொருளாளராகவும் உள்ளார்.

பிராமண சமூகத்தை சேர்ந்த ஒருவர் தமிழக அமைச்சரவையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிடிஆர் நிர்மல்குமார் உசிலம்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட சிடிஆர் நிர்மல்குமார் பொறியியல் பட்டதாரியாவார்.

சட்டப்படிப்பை முடித்து, குற்றவியல் மற்றும் காவல் நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் பொறுப்பில் இருந்த நிர்மல்குமார், பாஜகவில் நீண்ட காலம் பயணித்தார்.

அங்கு அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து விலகி அதிமுகவில் 2023-ல் இணைந்தார். அவருக்கு அங்கு தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநில இணைச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்பின் 2025-ல் அதிமுகவில் இருந்து விலகி, விஜய் முன்பாக தன்னை தவெகவில் சேர்த்துக் கொண்டார்.

அவருக்கு மாநில இணைச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனந்துக்குப் பின்பு, கட்சியின் முடிவுகள் குறித்து வெளியில் பேசும் முக்கிய நபராக அறியப்படுகிறார்.

ராஜ்மோகன்

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்மோகன் (39) இதழியலில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு’ என்ற நிகழ்ச்சியில் வென்று பரிசு வாங்கியதே இவருக்குக் கிடைத்த முதல் அடையாளம்.

அதன்பின் யூடியூப் சேனல் தொடங்கி பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து காணொலிகள் வெளியிட்டார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடிகர் என பல்வேறு தளங்களில் இயங்கிய ராஜ்மோகன், 2023-ல் ‘பாபா ப்ளாக் ஷீப்’ என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

விஜய் கட்சி தொடங்கியதும் அதில் சேர்ந்த ராஜ்மோகனுக்கு, கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. எழும்பூர் தொகுதியில் களமிறங்கி வென்று தற்போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சாரகியுள்ளார்.

டி.கே.பிரபு

காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த டி.கே.பிரபு, மருத்துவராவார். தமிழக காங்கிரஸ் கட்சியின் ஐடி அணியில் முக்கியநபராக இயங்கி வந்தார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக பிரபலமான பிரபு, தவெக தொடங்கியபின் அதில் இணைந்தார். காரைக்குடியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை எதிர்த்து களம்கண்டு வென்றுள்ளார்.

கீர்த்தனா

29 வயதான கீர்த்தனா, எம்எஸ்சி பட்டதாரியாவார். பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் வேலை செய்தபோது, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் பணியாற்றினார்.

திமுக தரப்பில் பென் நிறுவனம் தொடங்கியதும் அதில் இணைந்தும் வேலை செய்தார். 2025-ல் அங்கிருந்து விலகி, விருதுநகரில் சுயேட்சையாக போட்டியிட களப்பணியாற்றினார். ஆனால், திடீரென தவெகவில் மார்ச் 28-ம் தேதி இணைந்தார். மறுநாளே அந்தக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தற்போது தொழிற்துறை அமைச்சராக உயர்ந்துள்ளார்.

என்.ஆனந்த் முதல் கீர்த்தனா வரை: 9 அமைச்சர்களின் பின்புலம் - ஒரு பார்வை
‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ முறையால் மதிப்பெண் குறைகிறதா? - சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பும் பின்புலமும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in