

கோவை: அமித் ஷா வருகை என்பது முதல்வர் ஸ்டாலினை பாதித்துள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “திண்டுக்கல்லில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘அண்மையில் தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உண்மைக்கு புறம்பாக பேசிவிட்டுச் சென்றுள்ளார்.
அவர் அமித் ஷாவா அல்லது அவதூறு ஷாவா என சந்தேகம் உள்ளது. தமிழ்நாட்டில் இந்து சமய நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகளுக்கு முடிவுகட்டும் வகையில் திமுக செயல்படுகிறது’ எனப் பேசியுள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சுமார் 4 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம் என்றும் பேசியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதை செயல்படுத்தாமல் அராஜகத்தில் திமுக அரசு ஈடுபட்டது. இதை விடவா, திமுக அரசின் இந்து விரோதப் போக்குக்கு உதாரணம் வேண்டும்?
இந்து கோயில்களின் கும்பாபிஷேகம் முழுக்க முழுக்க இந்து பக்தர்களின் நன்கொடை, காணிக்கையால் மட்டுமே நடக்கிறது. கோயில் கும்பாபிஷேகம் நடத்த, அறநிலையத் துறைக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைதான் உள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் புதிய உற்சவர் சிலைகள் செய்ய பக்தர்களிடம், 312 சவரன் தங்கம் நன்கொடையாக வசூலிக்கப்பட்டதும், புதிதாக தயாரித்த உற்சவர் சிலைகளில், துளி கூட தங்கம் இல்லை என்று சென்னை ஐஐடி ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
இப்படி கோயில் பணம் கொள்ளை போகிறது. இதைதான் அமித் ஷா அம்பலப்படுத்தினார். அமித் ஷா வருகை என்பது முதல்வர் ஸ்டாலினை மிகவும் பாதித்துள்ளது என்று நினைக்கிறேன்.
அடுத்த முறை அமித் ஷா தமிழ்நாடு வரும்போது அதிமுக - பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். அப்படி அமையும் கூட்டணி வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும். அதனால்தான் முதல்வர் ஸ்டாலின் அரசு விழாவிலும் அரசியல் பேசி புலம்புகிறார். இனிவரும் நாட்களில் திமுகவின் கதறல் அதிகமாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.