“சமூக நீதித் துறைக்கு தமிழக பட்ஜெட்டில் கூடுதல் நிதி...” - திருமாவளவன் பாராட்டு

திருமாவளவன் | கோப்புப் படம்
திருமாவளவன் | கோப்புப் படம்
Updated on
1 min read

அரியலூர்: “தமிழக பட்ஜெட்டில் சமூக நீதித் துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி உள்ளது வரவேற்கத்தக்கது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் அங்கனூரில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பட்ஜெட் குறித்த முழுமையான விவரங்களைப் படித்துப் பார்த்த பின்னரே விரிவான கருத்துகளைத் தெரிவிக்க முடியும். இருப்பினும், தற்போது வெளியாகியுள்ள சில அறிவிப்புகள் மிகவும் பாராட்டுக்குரியவையாகும்.

குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு தலைக்கவசம் மற்றும் இதர உபகரணங்களை வைக்கக்கூடிய வசதியுள்ள மிதிவண்டிகள் வழங்குவதற்கு அரசு முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. கலைஞர் கனவு திட்டம் என்ற பெயரில் இயங்கி வந்த திட்டத்தை வெற்றி வீடு திட்டம் என பெயர் மாற்றம் செய்து, தற்போது அதற்கான தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

அந்த மதிப்பீடு உயர்த்தப்பட வேண்டும் என கடந்த ஆட்சியில் விசிக சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த அரசு வீடு கட்டும் மதிப்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளதை பாராட்டி வரவேற்கின்றேன்.

அதேபோல், சமூக நீதித் துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி உள்ளது வரவேற்கத்தக்கது, அதற்காக பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். பண்டிதர் அயோத்திதாசர் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.419 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டத்துக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவித்தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை, கடந்த காலங்களை விட தற்போது ஒரு மடங்கு கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது. சமூக நீதித் துறையை சுதந்திரமாக இயங்கச் செய்வதற்கும், அதற்கான நிதியை முழுமையாகச் செலவிடுவதற்கான வாய்ப்பையும் இந்த அரசு வழங்கியுள்ளது பட்ஜெட்டிலும் எதிரொலித்துள்ளது’ என்றார்.

திருமாவளவன் | கோப்புப் படம்
“மக்களின் எதிர்பார்ப்புகளை தமிழக பட்ஜெட் நிறைவு செய்யவில்லை” - மு.வீரபாண்டியன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in