‘தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு அழிப்பதை மோடி அரசு வேடிக்கை பார்ப்பதா?’

அகில இந்திய மீனவர் காங்கிரஸ் கண்டனம்
‘தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு அழிப்பதை மோடி அரசு வேடிக்கை பார்ப்பதா?’
Updated on
1 min read

ராமேசுவரம்: மீன்பிடிப் படகுகளை அழிப்பது இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற நடவடிக்கை என அகில இந்திய மீனவர் காங்கிரஸின் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அகில இந்திய மீனவர் காங்கிரஸின் தேசிய தலைவர் பாம்பனைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளைச் சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்துள்ள இலங்கை கடற்படை, அவற்றை உடைத்து அழிப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.

மீன்பிடிப் படகுகளை அழிப்பது என்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் செயலாகும். இலங்கை அரசின் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கை ஆகும். இலங்கை அரசு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக அழித்துக்கொண்டிருக்கும் நிலையில், மோடி அரசு மவுனமாக இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மீனவர்களுக்கு ஒவ்வொரு முறையும் அநீதி இழைக்கப்படும்போதும், மோடி அரசு அதற்கு தீர்வு காணாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.

இலங்கை அரசின் இந்தக் கொடூரமான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாகக் கண்டிக்க வேண்டும். இனி எந்தவொரு மீன்பிடிப் படகும் அழிக்கப்படாமல் தடுத்து நிறுத்துவதுடன், இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளையும் அவற்றின் உரிமையாளர்களிடம் சேதமின்றி முழுமையாகத் திரும்ப ஒப்படைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேலும், அழிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளுக்காகவும், அதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உரிய இழப்பீடு வழங்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு அழிப்பதை மோடி அரசு வேடிக்கை பார்ப்பதா?’
சிஎஸ்ஐஆர் 85: கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தை செப்.28-ல் பார்வையிட வாய்ப்பு!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in