

ஓசூர்: தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையைப் பாதுகாக்க டிசம்பர் முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என ஏஐடியுசி அகில இந்திய பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர் தெரிவித்துள்ளார்.
ஓசூரில் ஏஐடியுசியின் 21-வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவது, வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைச் செய்ய முயல்வது போன்ற செயல்களால் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
தேர்தல் ஆணையர் நியமனத் தேர்வுக் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை நியமித்ததன் மூலம் தேர்தல் ஆணையம் கைப்பாவையாக மாற்றப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பெறாத பாஜக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது. டெல்லியில் போராட்டங்களைத் தடுக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் சேவைகளை நிறுத்துவது, ரயில்களை ரத்து செய்வது, போராட்டக்காரர்களைக் கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.
தொகுதி மறுவரையறை மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்ற பெயரில், கல்வி, சுகாதாரம், மனிதவளக் குறியீடுகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தென் மாநிலங்களின் மக்களவைப் பிரதிநிதித்துவத்தைக் குறைத்துத் தண்டிக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. இதற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
சர்வதேச நீதிமன்றமும் அரசியலமைப்பும் உறுதி செய்துள்ள தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி, டிசம்பர் முதல் நாடு தழுவிய அளவில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்களையும் தொடர் மறியல் போராட்டங்களையும் விவசாய சங்கங்களுடன் இணைந்து முன்னெடுக்க மத்தியத் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.