விவசாயிகள் பிரச்சினை: தமிழகம் முழுவதும் ஆக.14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் பழனிசாமி பங்கேற்பு
இபிஎஸ்

இபிஎஸ்

Updated on
1 min read

சென்னை: பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது, மேகேதாட்டு விவகாரம் உள்ளிட்ட விவசாயிகள் பிரச்சினையில் தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனறு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தவெக தனது தேர்தல் அறிக்கையில், ‘5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்குமேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்’ என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆட்சிக்கு வந்த தவெக அரசு குறு, சிறு விவசாயிகள் ரூ.75 ஆயிரம் வரை பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும், விவசாயிகளை வகை பிரித்து ஒரு பகுதி கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. இது, தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முழு வேகத்துடன் முயற்சிகள் மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கப் பார்க்கிறது.

தவெக அரசு, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்த அரசு வெளியிட வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஏற்கெனவே நான் அறிவித்திருந்தேன். தவெக அரசு பட்ஜெட்டில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி அறிவிப்பை வெளியிடவில்லை.

எனவே, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு, மேகேதாட்டு பிரச்சினையில் மெத்தனம் காட்டி வரும் தவெக அரசைக் கண்டித்தும், காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெற முயற்சி எடுக்காத தவெக அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் வரும் ஆக.14-ம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் (சென்னை தவிர்த்து) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு நான் தலைமையேற்க உள்ளேன். சென்னை மாவட்டம் நீங்கலாக, இதர வருவாய் மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்போர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>இபிஎஸ்</p></div>
ஊழல் வழக்கில் தாமத நடவடிக்கையா? - லஞ்ச ஒழிப்புத் துறை மீது ஐகோர்ட் அதிருப்தி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in