

அதிமுக-வில் 2-ம் கட்டமாக 127 வேட்பாளர்கள் பட்டியலை பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
அதிமுகவில் ஏற்கெனவே 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 16 எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பொதுச் செயலாளர் பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். துணைப் பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியிலும், நத்தம் விசுவநாதன் நத்தம் தொகுதியிலும், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் போட்டியிடுகிறார்.
இதனைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நேற்று 127 வேட்பாளர்கள் அடங்கிய 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் பழனிசாமி வெளியிட்டார். இதில் 30 எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 42 புதுமுகங்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக-வில் கூட்டணி கட்சிகளுக்கு 67 தொகுதிகளை ஒதுக்கியுள்ள நிலையில், 167 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. இதுவரை அதிமுக சார்பில் போட்டியிடும் 150 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் உள்ளிட்ட 17 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது.
அதிமுக வேட்பாளர் பட்டியலில் 46 எம்எல்ஏ-க்களும், 26 முன்னாள் எம்எல்ஏ-க்களும், 6 முன்னாள் எம்பி-க்களும் இடம்பெற்றுள்ளனர். 17 பெண்களும் போட்டியிடுகின்றனர். இவர்களில் 8 பேர் மகளிரணி நிர்வாகிகள். 36 முன்னாள் அமைச்சர் களுக்கும் 54 மாவட்டச் செயலாளர்களுக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருவருக்கும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 21 பேர் ஒன்றிய நிர்வாகிகளாகவும் உள்ளனர்.
மகளிரணி இணைச் செயலாளரும், லட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியுமான லீமா ரோஸ் லால்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர்களில் 7 பேர் பொறியாளர்களாகவும், 8 பேர் மருத்துவர்களாகவும், 23 பேர் வழக்கறிஞர்களாகவும், 33 பேர் இதர பட்டதாரிகளாகவும் உள்ளனர்.
தவெக நிர்வாகியான முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் போட்டியிடும் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில், கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.பி.பாபுவையும், ஓபிஎஸ் களமிறங்கும் போடி தொகுதியில் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.டி.நாராயணசாமியையும் பழனிசாமி நிறுத்தியுள்ளார். முன்னாள் அமைச்சர்களான ராஜலட்சுமி, சரோஜா, பா.வளர்மதி, சேவூர் ராமச்சந்திரன், சிவபதி, ஆவடி அப்துல் ரஹீம், மாஃபா பாண்டியராஜன் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.