

சென்னை: திமுக அரசு மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து டிசம்பர் 16ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அதன் விபரம் வருமாறு: தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரியை உயர்த்துவதில் எவ்வித முறையையும் பின்பற்றாமல், தான்தோன்றித்தனமாக வீடுகளுக்கு 100 சதவீதமும்; வணிக நிறுவனங்களுக்கு 150 சதவீதமும் உயர்த்தியுள்ளது.
> தாம்பரம் சானடோரியத்தில் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அவசர அவசரமாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும், சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான உபரகணங்களும் இல்லை. மேலும், இங்கு குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லாத காரணத்தால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த அவதியுறுகின்றனர். இங்கு தூய்மைப் பணியாளர்கள் போதிய அளவில் இல்லாததால், மருத்துவமனை முழுவதும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.
> மாநகராட்சிக்குட்பட்ட ஏரிகள் அனைத்தும் முறையான பராமரிப்பின்றி, கழிவுநீர் குட்டைகளாக மாறி உள்ளதோடு, பூங்காக்கள் அனைத்தும் சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறி உள்ளன. சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளன.
> மக்களின் குடிநீர்த் தேவையை கருத்தில்கொண்டு, ஜெயலலிதா நல்லாசியோடு நடைபெற்ற எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில், மாடம்பாக்கம் ஏரியில் பெரிய கிணறுகள் அமைத்து அதன்மூலம் மாடம்பாக்கம், சிட்லபாக்கம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டுவந்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. கடந்த 55 மாத கால திமுக ஆட்சியில் மாடம்பாக்கம் ஏரி எவ்வித பராமரிப்பும் இன்றி, கழிவுநீர் கலக்கப்பட்டு மாசடைந்துவிட்டதால், குடிநீருக்கு மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
> மாடம்பாக்கம் பகுதி, பரங்கிமலை (மேற்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகரம்தென் ஊராட்சி, மதுராப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கோயிலாஞ்சேரி ஆகிய இடங்களில் உள்ள விவசாய விளை நிலங்களை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மூலம் Land Pooling Area Development Scheme (LPADS) என்கிற திட்டத்தின் பெயரில் மொத்தம் 600 ஏக்கர் விவசாய நிலங்களை விடியா திமுக அரசு கையகப்படுத்துவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக, காலம் காலமாக விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகின்ற விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
> அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சிட்லபாக்கம் ஏரி மேம்பாட்டுப் பணிகள், விடியா திமுக ஆட்சி அமைந்தவுடன் அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது. இதன் காரணமாக, மக்கள் பல்வேறு வகைகளில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இப்படி மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வரும், திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தின் சார்பில் டிசம்பர் 16ம் தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 4 மணியளவில், மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் தலைமையில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச. ராசேந்திரன், முன்னிலையில், இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.