

நாமக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்
நாமக்கல்: “நாமக்கல் அதிமுக வேட்பாளரை மாற்ற வேண்டும். இதை வலியுறுத்தி கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுகிறோம்” என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரின் ஆதரவு பெற்ற ஒன்றிய செயலாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து புதுச்சத்திரம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கோபி, நாமக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, மேற்கு ஒன்றிய செயலாளர் சேகர், மோகனூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம் ஆகியோர் இன்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது:
“நாமக்கல் தொகுதி வேட்பாளராக மோகன் என்பவரை அறிவித்தது அதிர்ச்சியாக உள்ளது. இதற்கு மாவட்ட செயலாளர் தங்கமணிக்கு பெருந்தொகை கைமாறியிருப்பதாக கட்சியினர் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு எங்களிடம் ஆதாரம் எதுவும் இல்லை.
பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வேட்பாளராக வந்துள்ள நபரால் எங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. எனவே, கட்சியினர் ஒட்டுமொத்தமாக பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மேற்கு, கிழக்கு மற்றும் மோகனூர், புதுச்சத்திரம் என 4 ஒன்றிய செயலாளர்கள், ஒரு துணை ஒன்றிய செயலாளர், ஒரு பொதுக்குழு உறுப்பினர் உள்பட மாநகரத்தில் உள்ள 39 வார்டு செயலாளர்கள் மற்றும் 80 சதவீத கிளை செயலாளர்கள் என அனைவரும் பொறுப்பில் இருந்து விலகுவதாக கையெழுத்திட்டு கடிதம் அளித்துள்ளனர்.
இதனை நாங்கள் பொதுச் செயலாளரிடம் வழங்க உள்ளோம். கட்சிக்கு எதிராக வேலை செய்த நபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நாங்கள் தேர்தல் பணி செய்ய இயலாது என்பதால் பதவியில் இருந்து விலகுகிறோம். பொதுச் செயலாளரை, மாவட்ட செயலாளர் தங்கமணி மிரட்டியதால் மோகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் தொகுதியை மாவட்ட செயலாளர் புறக்கணித்து வருகிறார். பொங்கல் பண்டிகை சமயத்தில் மாவட்ட செயலாளர் தங்கமணி பரிசு வழங்கினார். ஆனால் நாமக்கல் தொகுதியில் மட்டும் வழங்கவில்லை. அதேவேளையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை மாற்றம் செய்ய வேண்டும். யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக அறிவிக்கட்டும் மோகன் வேண்டாம்” என்றனர்.
முன்னதாக, நாமக்கல் அதிமுக வேட்பாளரை மாற்ற வலியுறுத்தியும், மாவட்ட செயலாளர் தங்கமணிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது.
நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர், நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதற்காக நாமக்கல் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த இரு மாதங்களாக ‘கிடா’ வெட்டி கட்சியினர் மற்றும் மக்களுக்கு விருந்து படைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.