

சென்னை: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவராக நீடிப்பது தவறு என்று அதிமுக எம்பி ஐ.எஸ்.இன்பதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தவெகவில் இணைவதற்கு முன்பே இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராக இருந்தார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் ஆதவ் அர்ஜூனா இடம்பெற்றுள்ளார். அவருக்கு, பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜூனா, இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் நீடித்து வருவதாக அதிமுக எம்பி ஐ.எஸ்.இன்பதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு விளையாட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் (BFI) தலைவராகவும் தொடர்ந்தும் பதவி வகித்து வருகிறார் என்று பிஎஃப்ஐ இணையதளம் உறுதிப்படுத்துகிறது.
இது தவறாகும். இதன் மூலம், விளையாட்டு நிர்வாகத்தின் சார்பில்லாத தன்மை பாதிக்கப்படும். பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும்.
நிர்வாகம் நியாயமாக இருக்க வேண்டுமெனில், பாகுபாடு இல்லாமல் இருப்பது மட்டுமல்ல,பாகுபாடு இருப்பதாக ஒரு எண்ணம் தோன்றாமல் இருப்பது அவசியம்” என்று பதிவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இன்பதுரை வெளியிட்ட பதிவில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் செயல்கள். அவர் அதிமுக உள்ளிட்டமற்ற அரசியல் கட்சிகள் பற்றி கூறிய கருத்துகளை பார்த்தால், அவர்தான் நடைமுறைப்படி முதல்வராக இருப்பது போல தெரிகிறது.
இதுவரை அவர் சேராத ஒரே கட்சி ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ தான்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.