

நாகப்பட்டினம்: நாகை அருகே நடைபெற்ற அரசு விழா மேடை முழுவதையும் தவெகவினர் ஆக்கிரமித்திருந்ததால் அதிர்ச்சியடைந்த அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன், விழாவை புறக்கணித்து வெளியேறினார்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுத் துறை உயர் அலுவலர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதில் பங்கேற்க எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் வந்தபோது, நிகழ்ச்சி மேடை முழுவதையும் 30-க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் ஆக்கிரமித்திருந்தனர். தவெக நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாருக்கு பதிலாக அவருடைய மகன் ரொனால்டோ பங்கேற்றார்.
இதைக் கண்டு அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்த ஓ.எஸ்.மணியன் அங்கிருந்த சமூக நலத்துறை அதிகாரிகளிடம், ‘‘மாவட்ட ஆட்சியர், அரசு அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள் என கூறி என்னை அழைத்துவிட்டு, மேடை முழுவதையும் தவெகவினர் ஆக்கிரமித்திருக்கின்றனர். இது அரசு விழாவா அல்லது தவெக கட்சி விழாவா’’ என கடிந்து கொண்டார். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
அப்போது அவரை அதிகாரிகள் சமாதானப்படுத்தியும், அதை ஏற்காமல் ஓ.எஸ்.மணியன் அங்கிருந்து வெளியேறினார். இதனால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர். விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.