

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தன்னை புறக்கணிப்பதாகக் கூறி சங்கராபுரம் அதிமுக எம்எல்ஏ-வான ராகேஷ் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தொகுதியின் அதிமுக எம்எல்ஏவான ராகேஷ், தொகுதி சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக ஆட்சியரை தொடர்பு கொண்டால் அவரது உதவியாளர் மட்டுமே பேசுவதாகவும், மாவட்ட திட்ட அலுவலரை தொடர்புகொண்டால் அவர் பேசவே முன்வருவதில்லை என்றும், இதனால் மக்கள் பிரச்சினைகளை யாரிடம் சென்று பேசுவது எனத் தெரியவில்லை என்றும் கூறி தனது ஆதரவாளர்களுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அடங்கிய கூட்டம் நடத்தினாலும், அதற்கு யாரும் செல்லவேண்டாம் என திட்ட இயக்குநர் தடுப்பதாகக் கூறி, அதற்கு தீர்வு காணவே தற்போது தர்ணாவில் ஈடுபட்டதாகக் கூறினார்
இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி மற்றும் ஊராட்சிகள் உதவி இயக்குநர் வெங்கட்ராமன் ஆகியோர் எம்எல்ஏ ராகேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின் தனது போராட்டத்தை விலக்கிக் கொண்டு, தொகுதி பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகக் கூறிவிட்டுச் சென்றார்.