ராமநாதபுரம் தொகுதியை தொடர்ந்து பாஜகவுக்கு ஒதுக்குவதால் அதிமுகவினர் ஏமாற்றம்!

ராமநாதபுரம் தொகுதியை தொடர்ந்து பாஜகவுக்கு ஒதுக்குவதால் அதிமுகவினர் ஏமாற்றம்!
Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதியை தொடர்ந்து பாஜகவுக்கு ஒதுக்குவதால், அதிமுகவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாத புரம், முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய தொகுதி களில் அதிமுக போட்டியிட உள்ளது. ராமநாதபுரம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுக 6 முறை வென்று முதலிடத்தில் உள்ளது. 1952 முதல் 2021 வரை 16 முறை நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் 1977, 1980, 1984, 1991, 2001, 2016 என அதிமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது.

திமுக 5 முறையும், காங்கிரஸ் 3 முறை, மனிதநேய மக்கள் கட்சி, சுயேச்சை தலா ஒரு முறையும் வென்றுள்ளன. கடந்த 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கமும், 2016-ல் அதிமுகவின் எம்.மணிகண்டனும் வெற்றி பெற்றனர்.

தற்போது பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது குறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே தமிழகத்தில் ஆட்சியில் அமரும் என்ற அரசியல் சென்டிமென்ட் தொடர்ந்து வருகிறது.

ராமநாதபுரம் அதிமுக கோட்டையாக இருந்தபோதும், கடந்த 2021 தேர்தல், தற்போதைய தேர்தலில் கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கியதால் அதிமுகவினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் அதிமுக நேரடியாக போட்டியிட வேண்டும்.

அதற்கேற்ற அதிமுக வேட்பாளரை கட்சித் தலைமை நிறுத்தி வெற்றிபெறச் செய்ய முயற்சித்திருக்க வேண்டும். தொகுதி கிடைக்காதது ஏமாற்றமே என்றாலும், கூட்டணி தர்மம் கருதி தேர்தல் பணியாற்றுவோம்’ என்றனர்.

ராமநாதபுரம் தொகுதியை தொடர்ந்து பாஜகவுக்கு ஒதுக்குவதால் அதிமுகவினர் ஏமாற்றம்!
அசத்தும் மம்தா... அசராத பாஜக... மேற்கு வங்கத்தில் முந்துவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in