

அதிமுக சார்பில், கோவையிலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட பழையவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் உள்ளிட்டோருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது பேசு பொருளாகி உள்ளது.
அதிமுகவில் 'சீட்' மறுக்கப்பட்டோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி. 2001- 06 காலத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். 2011 சட்ட சபைத் தேர்தலில் சூலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டதால் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்.
இதனைத் தொடர்ந்து 2011-ல் கோவை மேயர் பதவியையும், மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியையும் இவருக்கு ஜெயலலிதா வழங்கினார். பின்னர், 2014-ல் சில காரணங்களால் மேயர் பதவி, கட்சிப் பதவி பறிக்கப்பட்டு கட்சியில் ஓரம்கட்டப்பட்டார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின், 2019-ல் நடந்த சூலூர் இடைத்தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த செ.ம.வேலுசாமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தொடர்ந்து 2021 சட்டப் பேரவைத் தேர்தலிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால் விரக்தியில் இருந்தவருக்கு, கட்சியின் அமைப்பு செயலாளர் பதவி வழங்கி பொதுச்செயலாளர் பழனிசாமி நம்பிக்கை ஊட்டினார். இதனால் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என செ.ம.வேலுசாமி எதிர்பார்த் திருந்தார்.
இம்முறை சூலூர் அல்லது பல்லடம் தொகுதி தனக்கு நிச்சயம் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், எஸ்.பி.வேலுமணியின் ஆசி இல்லாததால் வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற வில்லை. இதனால் செ.ம.வேலுசாமியின் ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
அதேபோல், மேட்டுப்பாளையம் தொகுதி சிட்டிங் எம்எல்ஏ வான ஏ.கே.செல்வராஜ். ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராகவும், ராஜ்ய சபா எம்பியாகவும் இருந்தவர். ஈரோட்டில் செங்கோட்டையன் விலகியபோது, அவர் வகித்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டார். மேட்டுப்பாளையம் அல்லது ஈரோடு மாவட்டத்தில் ஒரு தொகுதியை எதிர்பார்த்து இருந்த இவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணைச் செயலாளர் வடவள்ளி சந்திர சேகர், சில மாதங்கள் மனக் கசப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகியிருந்தார். அதன் பின் மீண்டும் கட்சியில் இணைந்த அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு பொய்த்து போயுள்ளது.
கோவையில் ஏதாவது ஒரு தொகுதியை எதிர்பார்த்த மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் பேரவை பிரபாகரனுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. சிட்டிங் எம்எல்ஏவும், மாஜி அமைச்சருமான செ.தாமோதரனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் கிணத்துக் கடவில் 'சீட்' எதிர்பார்த்திருந்த மாஜி எம்எல்ஏ எட்டிமடை சண்முகம் உள்ளிட்டோரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மடத்துக்குளம் தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால், அங்குள்ள சிட்டிங் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு 'சீட்' ஒதுக்கப்படவில்லை. தொகுதியை எதிர்பார்த்திருந்த நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, முன்னாள் எம்எல்ஏ சாந்திராமுவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக நிர்வாகிகள் கூறும்போது, ”மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் ஒவ்வொரு தேர்தலிலும் அதிக தொகுதிகளில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கும். ஆனால், தற்போது சிட்டிங் எம்எல்ஏ உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது கட்சி நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும், தேர்தல் நெருங்கும் போது கசப்புகளை மறந்து தேர்தல் பணியில் தீவிரமாகி விடுவோம் என்றனர்.